மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் 2026 டென்னிஸ் தொடரில் சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக மேற்கூரைகள் மூடப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. 40 டிகிரி செஸ்சியஸ் மேல் மெல்போர்னில் வெப்பம் நிலவுகிறது. இதன் காரணமாக வீரர்களை பாதுகாக்க, Heat Protocol என்ற முறையை 2வது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
காற்றின் வெப்பநிலை, கதிர்வீச்சு வெப்பம், ஈரப்பதம் மற்றும் காற்றின் வேகம் ஆகிய நான்கு முக்கிய காரணிகளைப் பரிசீலித்து இந்த நெறிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்அளவுகோலில் '5' என்ற நிலையை எட்டும்போது, வெளி மைதானங்களில் ஆட்டம் நிறுத்தப்படும். மெல்போர்ன் பூங்காவில் உள்ள நகரும் கூரைகள் கொண்ட மூன்று அரங்குகளில் கூரை மூடப்படும். முன்னதாக, சனிக்கிழமை ஜன்னிக் சின்னர் மைய மைதானத்தில் விளையாடிய போட்டியின் போது இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பத்தாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் கூரை திறந்திருந்தது. ஆனால், ஆர்யனா சபலெங்கா இவா ஜோவிச்சை 6-3, 6-0 என்ற செட்கணக்கில் வென்ற பிறகு மீண்டும் வெப்ப நெறிமுறை அமுல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த, அலெக்சாண்டர் ஸ்வரேவ் மற்றும் அமெரிக்க வீரர் லேர்னர் டீன் இடையேயான ஆண்கள் காலிறுதிப் போட்டிக்குக் கூரை மூடப்பட்டது.
போட்டி முடிவில் நிலவிய வெப்பநிலையைப் பற்றி சபலெங்கா பேசுகையில், "ஆட்டத்தின் முடிவில் மைதானத்தில் மிகவும் வெப்பமாக இருந்தது. கூரையை ஏறக்குறைய பாதியளவு மூடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் எங்களுக்குப் பின்னால் நிறைய நிழல் கிடைத்தது, நிழலில் இருக்க முடிந்தது" என்று குறிப்பிட்டார். மேலும் அவர் சிரித்துக் கொண்டே, "பெண்களாகிய நாங்கள் ஆண்களை விட வலிமையானவர்கள். அதனால் அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க ஆண்களுக்குக் கூரையை மூடியாக வேண்டும்!" என்று நகைச்சுவையாகக் கூறினார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை (113 ஃபாரன்ஹீட்) எட்டும் என கணிக்கப்பட்டிருந்ததால், ஏற்பாட்டாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். அதன் பின் நடந்த ஆடவர் காலிறுதி போட்டியில் அமெரிக்க வீரர் லெனர் டியனை, உலகின் 3ஆம் நிலை வீரரான ஜெர்மினியின் ஸ்வெரேவ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். தீவிர வெப்பம் ஏற்படும்போது, போட்டி நடுவர் ஆட்டத்தை நிறுத்துவதற்கோ அல்லது இடைவேளைகளை அளிப்பதற்கோ அதிகாரம் பெற்றவர் ஆவார். 'வெப்ப அழுத்த அளவுகோல்' '5' என்ற அளவை எட்டும்போது, பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்களில் போட்டி தானாகவே நிறுத்தப்படும்.
வெளி மைதானங்களில் நடைபெற உள்ள எந்தப் போட்டிகளையும் நடுவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். வெளி மைதானங்களில் நடைபெறும் ஆட்டங்கள் நிறுத்தப்பட்டால், அரங்குகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்குக் கூரைகளை மூடும் முடிவை நடுவர் எடுக்கலாம். ஆட்டத்தைத் மீண்டும் தொடங்குவது குறித்து நடுவரே முடிவு செய்வார. , மேலும், ஆட்டம் தொடங்குவதற்கு குறைந்தது அரை மணி நேரமாவது ஒவ்வொரு வீரருக்கும் அறிவிக்கப்பட வேண்டும்.
அளவுகோல் '4' என்ற நிலையை எட்டும்போது, ஏற்பாட்டாளர்கள் கூடுதலாக 10 நிமிட இடைவேளையை வழங்கலாம். இது பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களுக்கு இடையில் வழங்கப்படும். ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது செட்களுக்கு இடையில் இந்த இடைவேளை அளிக்கப்படும்.