AUS open-நள்ளிரவு வரை நீடித்த போர்.. காயத்தையும் மீறி அல்காரஸை வீழ்த்தி அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அரை இறுதிச் சுற்றுக்கு 10 முறை சாம்பியன் ஆன ஜோகோவிச் தகுதி பெற்றிருக்கிறார். 2025 ஆம் ஆண்டில் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. நட்சத்திர வீரர் ஜோகோவிச் தன்னுடைய 25 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி வருகிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் உலகின் முதல் நிலை வீரரான ஆல்காரசுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினார். இரண்டு முன்னணி வீரர்கள் காலிறுதியிலே மோதி கொள்ளும் அளவுக்கு அட்டவணை மாறியதால் ரசிகர்கள் இந்த போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.

37 வயதான ஜோகோவிச்சுக்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் முதல் செட்டை அவர் 4க்கு6 என்ற கணக்கில் இழந்தார். இந்த சூழலில் ஜோகோவிச், தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் களத்திற்கு திரும்பினார். இதை அடுத்து தன்னுடைய அதிரடி ஆட்டத்தை ஜோகோவிச் வெளிப்படுத்தி ஆல்காரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
21 வயதான ஆல்காரசை தனது அனுபவம் மூலம் ஜோகோவிச் எதிர்கொண்டு அடுத்த மூன்று செட்டுகளையும் ஆறுக்கு நான்கு ஆறுக்கு மூன்று, 6க்கு 4 என்ற கணக்கில் வென்று அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். கடந்த இரண்டு கிராண்ட் ஸ்லாம் தொடர்களின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச், ஆல்கார்ஸ் வீழ்த்திய நிலையில் தற்போது அதற்கு ஜோகோவிச் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் 38 நிமிடம் வரை நீடித்தது. இந்த போட்டி முடிய நள்ளிரவு 12 மணி 57 நிமிடம் ஆனது. இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை ஜோகோவிச், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொள்கிறார்.இதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் தன்னுடைய ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் பெல்லாரஸ் வீராங்கனை சபலெங்கா விளையாடி வருகிறார்.
கால் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தீசியாவை சபலெங்கா எதிர்கொண்டார். இதில் முதல் சட்டை 6க்கு 2 என்ற கணக்கில் சபலெங்கா வெற்றி பெற, இரண்டாவது செட்டை இரண்டுக்கு ஆறு என்று கணக்கில் இழந்தார். இதனை அடுத்து போட்டியை தீர்மானிக்கக்கூடிய மூன்றாவது செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றி சபலெங்கா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கொக்கோ காப்பை ஸ்பெயின் வீராங்கனை போல படோசா வீழ்த்தினார் கடந்த 13 போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த கோகோ காப்பை ஏழுக்கு ஐந்து, ஆறுக்கு நான்கு என்ற நேர் செட் கணக்கில் படோசா வீழ்த்தினார். உலகின் இரண்டாவது நிலை வீராங்கனையாக படோசா இருந்த நிலையில் காயம் காரணமாக தரவரிசையில் 140 வது இடத்திற்கு அவர் சரிந்தார். தற்போது அரையிறுதி வரை முன்னேறி இருக்கிறார். இவர் அரையிறுதியில் சபலெங்காவை மோத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, January 21, 2025, 21:56 [IST]
Other articles published on Jan 21, 2025


Click it and Unblock the Notifications