பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வென்று சாதனை படைத்திருக்கிறார். 2021 ஆம் ஆண்டில் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றைப் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டம் பாரிஸ் நகரில் நடைபெற்றது.
இதில் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான இத்தாலி நாட்டைச் சேர்ந்த சின்னர் உடன் ஸ்பெயிம் வீரர் அல்காரஸ் மோதினார். டென்னிஸ் உலகில் ரோஜர் பெடரர், நடார் ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் ஜோகோவிச்சும் தனது இறுதி கட்டத்தை எட்டிவிட்டார்.

இந்த தருணத்தில் டென்னிஸ் உலகின் அடுத்த முடிசூடா மன்னர்கள் யார் என்று கேள்விக்கு அல்காரசும் சின்னரும் பதில் அளித்தனர். இந்த போட்டிக்கு முன்பு அல்காரஸ் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டமும், சின்னர் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றி இருந்தனர். இதனால் இந்த ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இதற்கு தகுந்தார் போல் இரண்டு வீரர்களுமே ஒரு மகாபாரத யுத்தத்தையே நிகழ்த்தி விட்டார்கள். முதல் செட்டை சின்னர் ஆறுக்கு நான்கு என்று கைப்பற்ற, இரண்டாவது செட்டில் அல்காரஸ் அபாரமாக விளையாடி கடும் நெருக்கடி கொடுத்தார். எனினும் இதில் சின்னர் தன்னுடைய திறமையை பயன்படுத்தி ஏழுக்கு ஆறு என்று வென்றார். முதல் இரண்டு செட்டை சின்னர் வென்றதால் மூன்றாவது செட்டை சின்னர் வென்றால் போட்டி அத்துடன் முடிந்து விடும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தருணத்தில் நடப்பு சாம்பியன் அல்காரஸ் தோல்வியின் விழிம்பில் இருந்தார். ஆனால் கொஞ்சம் கூட பதற்றமே அடையாமல் தன்னுடைய விடாமுயற்சி மூலம் மீண்டும் எழுந்து தான் ஏன் சாம்பியன் என்பதை மீண்டும் நிரூபித்தார். மூன்றாவது செட்டில் அபாரமாக விளையாடிய அல்காரஸ் ஆறுக்கு நான்கு என்று கைப்பற்றினார். இந்த சூழலில் நான்காவது செட்டில் சின்னருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த செட்டை 6 க்கு 6 என்று இருவரும் கொண்டு சென்றனர். இந்த தருணத்தில் போட்டி டை பிரேக்கை நோக்கி சென்றது. இதில் மட்டும் சின்னர் வென்று இருந்தால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருப்பார். ஆனால் டை பிரேக்கில் ஏழுக்கு மூன்று என்ற கணக்கில் அல்காரஸ் நான்காவது செட்டை தனதாக்கினார். இதனால் போட்டி ஐந்தாவது செட்டுக்கு சென்றது.
இந்த செட்டிலும் இருவரும் தங்களுடைய ஏ ப்ளஸ் கேமை வெளிப்படுத்த டென்னிஸ் விளையாட்டு புதிய அரசனுக்கான சிம்மாசன யுத்தத்தில் இந்த இரண்டு வீரர்களும் பாகுபலியை போல் மோதிக்கொண்டனர். ஒருவர் இன்னொருவருக்கு சளைத்தவர் அல்ல என்று போட்டி நடந்தது. ஒரு கட்டத்தில் சின்னர் ஐ 6க்கு 5 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது தோல்வியின் விளிம்பில் அல்காரஸ் இருந்தார். ஆனால் என்ன மேஜிக் நடந்ததோ அல்காரஸ் திடீரென்று எரிமலை போல் வெடித்து சிதற தொடர்ந்து ஏழு புள்ளிகளை பெற்றார்.
இதனால் ஆட்டம் டை பிரேக்கருக்கு சென்று டைப் பிரேக்கரிலும் அல்காரஸ் முன்னிலை வகிக்கும் அளவுக்கு சென்றது. டை பிரேக்கரில் அல்காரஸ் தன்னுடைய இறுதி அடியை நிகழ்த்த, சின்னர் துவண்டு போனார்.எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என சின்னர் பதற்றத்தில் ஆட, அதனை அபாரமாக பயன்படுத்திக் கொண்டு அல்காரஸ் பத்துக்கு இரண்டு என்ற கணக்கில் டை பிரேக்கரை கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
5 மணி நேரம் 29 நிமிடம் நீடித்த இந்த இறுதி போட்டியில் 4-6, 6-7, 6-4,7-6,7-6 என்ற செட் கணக்கில் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார். இதன் மூலம் அல்காரஸ் தனது ஐந்தாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். ஸ்பெயினை சேர்ந்த அல்காரஸ் பிரெஞ்ச் ஓப்பனில் தன் நாட்டு ஜாம்பவான் நடாலை போல் விளையாடி ரசிகர்களை குதூகல படுத்தினார்.
கடைசி வரை போராடிய இத்தாலியின் சின்னர் ரசிகர்களின் இதயத்தை வென்றார். பல ஆண்டுகள் கழித்து இரண்டு இளம் வீரர்கள் பிரெஞ்ச் ஓப்பனில் ஒரு மிகப்பெரிய யுத்தத்தையே நிகழ்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் டென்னிஸ்க்கு இனி நாங்கள் தான் கிங் என்பதை அல்காரசும், சின்னரும் நிரூபித்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற அல்காரஸ்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் 24 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது.