பிரெஞ்சு ஓபன் 2025: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்.. நம்பர் 1 வீரர் சின்னர் உடன் மோதல்
பாரிஸ்: 2025 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) வெற்றி பெற்றார். அவர் மற்றொரு முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவை (Alexander Zverev) வீழ்த்தினார். இந்தப் போட்டி நான்கு செட்டுகள் வரை சென்றது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.
கால் இறுதிப் போட்டியில் 4-6 என முதல் செட்டை இழந்த அவர், அடுத்த மூன்று செட்டுகளை 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வரிசையாக வென்றார்.

மற்றொரு பிரெஞ்சு ஓபன் காலிறுதியில், உலகின் நம்பர் ஒன் வீரராக இருக்கும் ஜன்னிக் சின்னர் (Jannik Sinner) போராடி வென்றார். அரையிறுதியில் நோவக் ஜோகோவித்துடன் ஜன்னிக் சின்னர் மோதுவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் அரையிறுதியில் மோதுவதால், இந்த அரை இறுதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோகோவிச், இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சில போட்டிகளில் அவர் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, எதிராளிகளை எளிதில் வீழ்த்தி வருகிறார். தனது 100வது பிரெஞ்சு ஓபன் வெற்றியைப் பதிவு செய்து, ரஃபேல் நடாலுக்குப் பிறகு இந்தச் சாதனையைப் படைத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இது அவர் மீது உள்ள நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
பிரெஞ்சு ஓபனில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், இந்த ஆண்டு தனது 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். தற்போது 2025 பிரெஞ்சு ஓபனில் நோவக் ஜோகோவிச், சின்னர் உடனான கடினமான அரையிறுதியை வெல்வாரா? இறுதிப் போட்டிக்கு முன்னேறி 25வது முறையாக மீண்டும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டு அவருக்கு சில ஆரம்பகாலத் தோல்விகள் ஏற்பட்டாலும், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜோகோவிச்சின் தனித்தன்மை, அவரை இறுதிப் போட்டிக்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி (Lorenzo Musetti) மற்றும் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் (Carlos Alcaraz) மோத உள்ளனர். இந்த அரையிறுதி ஆட்டங்கள் நாளை, ஜூன் 6 ஆம் தேதி, நடைபெற உள்ளன.


Click it and Unblock the Notifications