பிரெஞ்சு ஓபன்: உலகின் நம்பர் 1 வீரர் சின்னருக்கு வெயிலால் வந்த சோதனை.. அதிர்ச்சித் தோல்வி!
பாரீஸ்: பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் 2026 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர், தரவரிசையில் பின் தங்கியுள்ள வீரரிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். வெற்றிக்கு மிக அருகில் இருந்த நிலையில், கடுமையான வெப்பம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவர் தனது ஆட்டத்தைத் தொடர முடியாமல் தடுமாறினார்.
இரண்டாவது சுற்றில் அர்ஜென்டினாவின் ஜுவான் மானுவல் செருண்டோலோவை சின்னர் எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய சின்னர், முதல் இரண்டு செட்களை 6-3, 6-2 என எளிதாகக் கைப்பற்றினார். மூன்றாவது செட்டிலும் 5-1 என முன்னிலை பெற்று வெற்றியை எட்டிப்பிடிக்கும் நிலையில் இருந்தார். அந்தச் சமயத்தில் பாரீஸில் நிலவிய கடுமையான வெப்பம் அவருக்குப் பெரும் சவாலாக மாறியது. அவருக்குத் திடீரென தலைச்சுற்றல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது.

அத்துடன் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் சின்னர் மைதானத்திலேயே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பிறகு களம் திரும்பிய அவரால் பழையபடி வேகமாக நகர முடியவில்லை. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட செருண்டோலோ, சின்னரை மைதானத்தின் மூலைகளுக்கு ஓடவிட்டுப் புள்ளிகளைக் குவித்தார்.
இதனால் மூன்றாவது செட்டை 7-5 என செருண்டோலோ தட்டிப்பறித்தார். அடுத்த இரண்டு செட்களிலும் சின்னரால் எவ்விதப் போட்டியும் அளிக்க முடியவில்லை. இறுதியில் 6-3, 6-2, 5-7, 1-6, 1-6 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி செருண்டோலோ வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். சுமார் 3 மணி நேரம் 36 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது.
இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் தொடரில் முன்னணி வீரர்கள் பகல் நேர ஆட்டங்களில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டதால், வெயிலின் தாக்கம் வீரர்களைப் பெரிதும் பாதித்துள்ளது. ஏற்கனவே கார்லோஸ் அல்காரஸ் இந்தத் தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது சின்னரும் வெளியேறியுள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டிற்குப் பிறகு உலகின் முதல் இரண்டு நிலை வீரர்கள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் தனது 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல நோவாக் ஜோகோவிச்சிற்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. மறுபுறம் சின்னரின் இந்தத் தோல்வி டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
