ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி.. போட்டுத் தாக்கிய பல்கேரிய வீரர்.. அமெரிக்க ஓபன் கனவு தகர்ந்தது!
நியூயார்க்: அமெரிக்க ஓபன் தொடரில் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் விடா முயற்சியுடன் போராடி வெற்றி பெற்றார். அதே சமயம், ரோஜர் பெடரர் போட்டியின் இடையே முதுகு வலியால் அவதிப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் முதல் செட்டை பெடரர் 6 - 3 என கைப்பற்றினார். அடுத்த சுற்றை டிமிட்ரோவ் 6 - 4 என கைப்பற்றினார். மூன்று மற்றும் நான்காவது செட்டையும் பெடரர் மற்றும் டிமிட்ரோவ் மாற்றி, மாற்றி கைப்பற்றினர்.
வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டுக்கு முன் பெடரர் முதுகு வலியால் அவதிப்பட்டு சிறிது நேரம் சிகிச்சைக்காக ஓய்வு எடுத்துக் கொண்டார். அதன் பின் ஐந்தாவது செட்டை ஆடிய அவரால் முழு வேகத்தில் ஆட முடியவில்லை. அதை பயன்படுத்திக் கொண்ட டிமிட்ரோவ் ஐந்தாவது செட்டை 6 - 2 என கைப்பற்றி காலிறுதியில் வெற்றி பெற்றார்/
ரோஜர் பெடரர் 2019 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தன் 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லலாம் என கனவுடன் இருந்தார். அதை தகர்த்து எறிந்துள்ளார் கிரிகோர் டிமிட்ரோவ். யாருப்பா அந்த வீரர்?
பல்கேரிய நாட்டை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் 78வது இடத்தில் இருக்கிறார். தன் இளமைக் காலத்தில் 2014ஆம் ஆண்டு விம்பிள்டன் அரை இறுதி வரை முன்னேறி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
எனினும், அத்துடன் அவரது முன்னேற்றம் நின்றது. மீண்டும் 2017 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார். அதன் பின்னும் அவர் சொதப்பி வந்தார். தற்போது ரோஜர் பெடரரை வீழ்த்தி 2019 அமெரிக்க ஓபன் அரையிறுதி வரை முன்னேறி இருக்கிறார்.
அமெரிக்க ஓபன் அரையிறுதி மட்டுமில்லாமல், அடுத்து வரும் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் டிமிட்ரோவ் என்ன செய்யப் போகிறார் என்பதே டென்னிஸ் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications