ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. கடைசி நேரத்தில் விலகினார் லியாண்டர் பயஸ்!
டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக சூப்பர் சீனியர் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் கடைசி நேரத்தில் அறிவித்துள்ளார்.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பாங்கில் 18ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணி பாலம்பாங்க்குக்கு சென்று சேர்ந்துள்ளது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாட உள்ள, 45 வயதாகும் லியாண்டர் பயஸ் மட்டும் அணியுடன் வரவில்லை. அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று அணியின் கேப்டனும் கோச்சுமான ஜூஷான் அலி கூறினார்.
18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பயஸ், இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 தங்கம் உள்பட 8 பதக்கங்களை வென்றுள்ளார். கடைசியாக அவர் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபன்னாவும், திவிஜ் ஷரனும் இணைந்து விளையாட உள்ளனர். அதனால், அனுபவமில்லாத சுமித் நாகல் அல்லது ஒற்றையர் ஸ்பெஷலிஸ்டான ராம்குமார் ராமநாதனுடன் இணைந்து பயஸ் விளையாட வேண்டும்.
இரட்டையர் பிரிவில் தன்னுடன் விளையாட அதில் அனுபவமுள்ள வீரரை தராததே போட்டியில் இருந்து விலகுவதற்கான காரணம் என்று பயஸ் கூறியுள்ளார். கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக பயஸ் அறிவித்துள்ளதால், மற்றொரு வீரரை அனுப்பும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸ் பிரிவில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 3 வெள்ளிப் பதக்கம் வென்றது.


Click it and Unblock the Notifications