ஊக்க மருந்து விவகாரம்: தடையை எதிர்த்து மரியா ஷரபோவா அப்பீல்
மாஸ்கோ: ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. அப்போது வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடைபெற்றது.

மரியா ஷரபோவாவிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியை சோதனை செய்தபோது அவர் மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் 2 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
உடல்நலனில் பிரச்சினைகள் இருந்ததால் மெல்டோனியம் என்ற மருந்தை உட்கொண்டு வந்ததாகவும் இந்த மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது பற்றி தமக்கு தெரியாது என்றும் ஷரபோவா விளக்கம் அளித்து இருந்தார். கடந்த ஜனவரி 1-ம் தேதி உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் மெல்டோனியத்தை தடை செய்திருந்தது.
இந்த நிலையில் மரியா ஷரபோவா தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியா ஷரபோவா தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை நீக்க வேண்டும். இல்லையெனில் தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும் எனக் கூறி மேல்முறையீடு செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications