அடுத்த சானியா மிர்சா இவர்தான்.. கோவை மாயா ராஜேஸ்வரன்..15 வயதில் கவனம் பெற்ற இளம் வீராங்கனை
சென்னை: இந்திய டென்னிஸில் தற்போது பரபரப்பாக பேசப்படும் நபர் மாயா ராஜேஸ்வரன். 15 வயதிலேயே தனது திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவர் எதிர்காலத்தில் சானியா மிர்சாவைப் போல பெரிய டென்னிஸ் நட்சத்திரமாக ஜொலிப்பார் என்று பலரும் நம்புகின்றனர். இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் மும்பையில் நடந்த WTA 125 போட்டியில் மாயா அரையிறுதி வரை முன்னேறினார். இதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மாயா, தனது இளம் வயதிலேயே டென்னிஸில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

தேசிய டென்னிஸ் சாம்பியனான வைதேஹி சௌத்ரி கூட மாயாவைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். "மாயா ஒரு சூப்பர் ஸ்டாராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் 15 வயதிலேயே எதையும் சாதிக்க முடியும்" என்று வைதேஹி கூறியுள்ளார்.
வைதேஹி மற்றும் மாயா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு போட்டியில் சந்தித்து இருந்தனர். அதில் வைதேஹி வெற்றி பெற்றாலும், மாயாவின் திறமையை அவர் பாராட்டியுள்ளார். "மாயா ஒரு அற்புதமான திறமையாளர். இப்போது அவர் நிறைய முன்னேறி வருகிறார். 15 வயதிலேயே மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். சண்டையிடும் மனப்பான்மை கொண்டவர். இந்த வயதில் இத்தனை தன்னம்பிக்கையுடன் சண்டையிட்டு ஆடும் ஒருவரை நான் பார்த்ததே இல்லை. கோர்ட்டை நன்றாக கவரேஜ் செய்கிறார். அவரது சர்வீஸ்களும் நன்றாக உள்ளன" என்று வைதேஹி கூறியுள்ளார்.
சானியா மிர்சா இந்திய டென்னிஸில் ஒரு பெரிய நட்சத்திரமாக விளங்கினார். அவர் உலக தரவரிசையில் 27வது இடத்தைப் பிடித்தார். அவருக்கு பின் இந்திய டென்னிஸில் இருந்து சர்வதேச அரங்கிற்கு மகளிர் பிரிவில் யாரும் செல்லவில்லை. மாயா விரைவில் ஸ்பெயினில் உள்ள ரஃபா நடால் அகாடமியில் பயிற்சி பெற உள்ளார். அவருக்கு இன்னும் நிறைய நேரம் இருப்பதால், சானியாவின் சாதனைகளை மிஞ்ச முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாயாவின் வருகை இந்திய டென்னிஸுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் பல இளம் பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட இது ஒரு ஊக்கமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications