யு.எஸ்.ஓபன்: லியாண்டர் பயஸ் தோல்வி
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் ஜோடி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு பட்டம் வாங்கித் தருவார்கள் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மகேஷ் பூபதியும், சானியா மிர்ஸாவும் முக்கிய கட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறி விட்டனர்.
இந்த நிலையில், லியாண்டர் பயஸ் மட்டுமே கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நம்பிக்கையைக் கூட்டியிருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் லியாண்டர் ஜோடி எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்து விட்டது.
லியாண்டர் - மேகான் சாகுனாசி (அமெரிக்கா) ஜோடி இறுதிப் போட்டியில், பெலாரஸின் மாக்ஸ் மிர்னயி, விக்டோரியா அசரன்கா ஜோடியை சந்தித்தது.
இரண்டு மணி நேரம் இந்தப் போட்டியில் பயஸ் ஜோடி 4-6, 6-7 (8-6) என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது.
இப்போட்டியில் பயஸ் வெற்றி பெற்றிருந்தால் இது அவருக்கு 8வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக இருந்திருக்கும். கடந்த 1999, 2001ல் பிரெஞ்சு ஓபன், 1999ல் விம்பிள்டன் போட்டிகளில் மகேஷ் பூபதியுடன் சேர்ந்து இரட்டையர் பட்டங்களை பயஸ் வென்றுள்ளார்.
2006ல் செக் வீரர் மார்டின் டாமுடனும், 1999ல் லிசா ரேமாண்ட்டுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பட்டம் மற்றும் 2003ல் மார்ட்டினாவுடன் சேர்ந்து விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பட்டங்களை பயஸ் வென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications