பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் டென்னிஸ் விளையாட்டில் ஒரே நாளில் இந்தியாவின் பதக்க வாய்ப்புகள் முடிவுக்கு வந்தன. இந்தியா சார்பில் இந்த முறை மூன்று டென்னிஸ் வீரர்கள் மட்டுமே பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு அனுப்பப்பட்டனர்.
அதில் சுமித் நாகல் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் ரோகன் போபண்ணா - ஸ்ரீராம் பாலாஜி ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவிலும் பங்கேற்றார்கள். மூன்று வீரர்கள் இரண்டு பிரிவுகளில் மட்டுமே பங்கேற்றனர். இந்த இரண்டு பிரிவிலும் முதல் சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றன. அந்த முதல் சுற்றில் இந்திய வீரர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தனர்.

அதன் மூலம், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அதே போல, ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - ஸ்ரீராம் பாலாஜி ஜோடி முதல் சுற்றுடன் வெளியேறியது. மகளிர் டென்னிஸ் பிரிவில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதை அடுத்து டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பு முதல் நாளிலேயே பறிபோனது.
இந்த மோசமான நிலையால், இந்திய அரசு டென்னிஸ் விளையாட்டுக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. உதாரணமாக சுமித் நாகல் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் தான் தற்போது இருக்கும் இடத்திற்கு உயர்ந்து இருக்கிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ஸ்பான்சர்ஷிப் கிடைத்ததாலேயே தொடர்ந்து கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்றார்.
அதேபோல ரோகன் போபண்ணா தனது சொந்த பணத்தை அதிக அளவில் செலவழித்து தான் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் வெற்றிகள் கிடைக்காததால் பரிசுப் பணம் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமல் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் முடிவிலும் இருந்தார். அதன் பின் அவர் மனம் மாறி தொடர்ந்து விளையாடி தனது 43 வது வயதில் 2024 ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
மகளிர் டென்னிசை பொறுத்தவரை சானியா மிர்சாவுக்கு அடுத்து வேறு யாரும் இந்தியாவிலிருந்து சர்வதேச டென்னிஸ் அரங்கிற்கு செல்லவில்லை. சானியா மிர்சா டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இந்தியா சார்பில் மகளிர் டென்னிஸ் போட்டிகளில் விளையாட யாருமே இல்லை என்பது மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்திய அரசு டென்னிஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கருத்து பகிரப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் தொடர்களில் டென்னிஸில் இந்தியா இதுவரை ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 1996இல் லியாண்டர் பயஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்று இருந்தார். அதுவே டென்னிஸில் இந்தியா வென்ற முதல் மற்றும் கடைசி ஒலிம்பிக் பதக்கமாக உள்ளது. அந்த நிலை மாற வேண்டும் என்றால் அதிக பணம் தேவைப்படும் டென்னிஸ் விளையாட்டுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். இல்லையெனில் வருங்காலத்தில் இந்தியாவில் இருந்து ஒரு வீரர் கூட சர்வதேச டென்னிஸ் விளையாடாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. டென்னிஸ் விளையாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பணக்காரர்கள் மட்டுமே டென்னிஸ் ஆட முடியும் என்பதையும் மாற்ற வேண்டும்.