Paris Olympics 2024: வெறும் 3 வீரர்கள்.. 140 கோடி மக்களின் கனவு.. நிறைவேறுமா டென்னிஸ் பதக்க கனவு?
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர்பில் இந்தியா மூன்று டென்னிஸ் வீரர்களை மட்டுமே பங்கேற்க செய்துள்ளது. அவர்கள் மூவரும் திறமையான வீரர்கள் என்பதால் 140 கோடி இந்தியர்களை பெருமைப்படுத்தும் வகையில் டென்னிஸில் ஒரு பதக்கமாவது இந்தியாவுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடைசியாக லியாண்டர் பயஸ் 1996இல் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்து இருந்தார். அதுவே இந்தியா டென்னிஸில் வென்ற முதல் மற்றும் கடைசி ஒலிம்பிக் பதக்கம் ஆகும். 28 ஆண்டுகளாக டென்னிஸில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்காத நிலையில், அந்த குறையை சுமித் நாகல், ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் போக்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சில மாதங்கள் முன்பு தான் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் பாரிஸின் ரோலண்ட் காரோஸ் அரங்கில் நடைபெற்று இருந்தது. தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக அங்கு மீண்டும் டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது. இந்த முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு பதிலாக பதக்கங்கள் முக்கியத்துவம் பெற உள்ளன. இந்த முறை ஆடவர் ஒற்றையார் பிரிவில் இகா சிவியாடெக் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
உலகின் முன்னணி வீரரும் பிரெஞ்சு ஓபன் ஸ்பெஷலிஸ்ட்-டுமான ரபேல் நடால் இந்த முறை ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு காலில் காயம் இருப்பதால் அவர் இரட்டையார் பிரிவில் மட்டுமே பங்கேற்க உள்ளார். இந்தியாவை பொறுத்தவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் பங்கேற்க இருக்கிறார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - ஸ்ரீராம் பாலாஜி ஜோடி பங்கேற்க உள்ளது. இதில் ரோகன் போபண்ணா இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் 2017 கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருந்தார். அடுத்து 2024 ஆம் ஆண்டு தனது 43வது வயதில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்று இருந்தார்.
தற்போது இளம் வீரர் ஸ்ரீராம் பாலாஜியுடன் அவர் ஜோடி சேர்ந்து இருக்கும் நிலையில் அனுபவ வீரரும், இளம் வீரரும் இணைந்து இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications