மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா

இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை 6-3, 6-4 என்ற அதிரடி நேர் செட்களில் வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார் பெட்ரா.
21 வயதேயான பெட்ரா, விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் 3வது செக் நாட்டு வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மார்ட்டினா நவரத்திலோவா மற்றும் ஜானா நவோத்னா ஆகியோர் விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளனர்.
மேலும், மார்ட்டினாவைப் போலவே பெட்ராவும் ஒரு இடது கை ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு இடது கை வீராங்கனை விம்பிள்டன் பட்டத்தை வெல்வதும் இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு எந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் பங்கேற்றவரில்லை பெட்ரா என்பது முக்கியமானது. நேற்றைய இறுதிப் போட்டியை வென்றதும் துள்ளிக் குதித்து கீழே மண்டியிட்டு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வெளியிட்டார் பெட்ரா.
வெற்றிக்குப் பின்னர் பெட்ரா பேசுகையில், மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகளை தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது. உலகப் புகழ் பெற்ற வீராங்கனைகள் ராயல் பாக்ஸில் இருந்தபடி என்னைப் பார்த்து மகிழ்ந்தது பெருமையாக இருக்கிறது. எனது ஆட்டத்தைப் பார்த்து ஆதரவு கொடுத்தது மிகவும் கெளரவமாக இருந்தது என்றார்.
நேற்றைய போட்டி மரியா ஷரபோவாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 2004 ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்ற மரியாவுக்கு அதன் பிறகு பட்ட வாய்ப்பு கை கூடாமலேயே உள்ளது. இந்த முறை அவர் எப்படியும் வென்று விடுவார் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் பெட்ரா அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டார்.
தோல்விக்குப் பின்னர் மரியா கூறுகையில், விம்பிள்டன் வெற்றி மேடையில் எனக்கு ரன்னர் அப் கிடைத்தது பெரும் வருத்தமாக இல்லை. சிறிய ஏமாற்றம்தான். இருந்தாலும் இங்கு இறுதி நிலை வரை வந்ததே பெருமையானதுதான். மீண்டும் இங்கு வெற்றிக் கோப்பையை ஏந்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
நேற்றைய போட்டியை மார்ட்டினா நவ்ரத்திலோவா மற்றும் ஜானா நவோத்னா ஆகிய இருவரும் நேரில் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications