Rafael Nadal: முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால பயணம்.. ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்!
மேட்ரிட்: 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் நவம்பர் மாதம் நடக்கவுள்ள டெவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
14 பிரெஞ்ச் ஓபன், 2 விம்பிள்டன், 2 ஆஸ்திரேலியா ஓபன், 4 யுஎஸ் ஓபன், ஒரு ஒலிம்பிக் பதக்கம், 90 ஏடிபி தொடர் என்று எண்ணற்ற சாதனைகளை படைத்தவர் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால். ரோஜர் ஃபெடரர் உச்சத்தில் இருந்து டென்னிஸில் ஆதிக்கம் செலுத்திய போது, அவரை கட்டுப்படுத்துவதற்காகவே டென்னிஸ் கடவுள்களால் அனுப்பப்பட்டவர் தான் நடால்.

தனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரையில் டென்னிஸ் களத்தில் வெற்றிக்காக போராடும் குணம் ரஃபேல் நடாலுக்கு இணையாக வேறு எந்த வீரரிடமும் இருந்ததில்லை. இயற்கையாக வலதுகை பழக்கம் கொண்ட நடால், டென்னிஸ் விளையாட்டுக்காக இடதுகை பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டவர். இதன் காரணமாகவே அவருக்கு டென்னிஸில் ஏராளமான வெற்றிகள் குவிந்தன.
கடந்த சில ஆண்டுகளாகவே ரஃபேல் நடால் காயம் காரணமாக கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்த நிலையில், தற்போது சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறேன்.
தற்போது காயம் காரணமாக ஏராளமான கட்டுப்பாடுகளுடன் உச்சபட்ச டென்னிஸை விளையாட முடியாத நிலை உள்ளது. இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து ரசிகர்கள் முன்னிலையில் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் நடக்கவுள்ள டெவிஸ் கோப்பை இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பிக் 3 என்ற போற்றப்படும் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் மற்றும் ஜோகோவிச் ஆகிய மூவரில் இரண்டு பேரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது ஜோகோவிச் மட்டுமே டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும், நடாலின் இறுதிப்போட்டியை காண்பதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications