"பார்ட்னருடன்" சேர்ந்து தங்க மறுத்த லியாண்டர்.. ரூம் கொடுக்க மறுத்த ஒலிம்பிக் வில்லேஜ்!
ரியோ டி ஜெனீரோ: இந்திய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் லியாண்டர் பயஸுக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தங்க இடம் தரப்படவில்லை. இதுகுறித்து அவர் அதிர்ச்சியும், ஏமாற்றமும், அதிருப்தியும் வெளியிட்டுள்ளார்.
ஆனால் அவர் இரட்டையர் பிரிவில் தன்னுடன் இணைந்து ஆடும் பார்ட்னர் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து தங்க மறுத்ததால்தான் அவருக்கு தங்குமிட வசதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதை இந்திய டென்னிஸ் அணியின் கேப்டன் ஜீசன் அலி மறுத்துள்ளார்.
அதேபோல அவர் லேட்டாக வந்ததால் இடம் கிடைக்கவிலலை என்றும் ஒரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே லியாண்டர் தொடர்பாக பல சர்ச்சைகள் உள்ள நிலையில் தற்போது இந்தப் புதிய விவகாரம் சேர்ந்துள்ளது.
மொத்தத்தில் லியாண்டருக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தங்க இடம் தரப்படவில்லை. ஏற்கனவே உள்ள சர்ச்சைகளோடு இந்த புதிய சர்ச்சையும் தற்போது இணைந்து கொண்டுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே பஞ்சாயத்துதான்
ஆரம்பத்திலிருந்தே லியாண்டர் தொடர்பாக ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். அவருடன் ஜோடி சேர்ந்து ஆட முடியாது என்று ரோஹன் போபண்ணா மறுக்க, அவர்தான் வேண்டும் என்று லியாண்டர் கெஞ்ச பெரும் பிரச்சினையானது.

வற்புறுத்தி ஜோடி சேர்த்தனர்
இந்த விவகாரத்தில் இந்திய டென்னிஸ் சம்மேளளனம் தலையிட்டு போபண்ணாவை வற்புறுத்தி லியாண்டருடன் இணைந்து இரட்டையர் போட்டியில் விளையாட சம்மதிக்க வைத்தது.

கிராமத்தில் வைத்து புதுப் பஞ்சாயத்து
இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் வைத்து புதிய பஞ்சாயத்து வெடித்துள்ளது. அங்கு லியாண்டரும், போபண்ணாவும் ஒரே இடத்தில் தங்குமாறு கூறப்பட்டுள்ளனர். ஆனால் அதை லியாண்டர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. போபண்ணாவுடன் சேர்ந்து தங்க முடியாது என்று அவர் கூறியதாக தெரிகிறது.

அறை கிடையாது
இதனால் லியாண்டருக்கு அறை ஒதுக்கப்படவில்லை. வேறு எந்த அறையும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. இது லியாண்டருக்குத் தெரியாது. நியூயார்க்கில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு விட்டு அவர் நேற்றுதான் ரியோ வந்து சேர்ந்தார். வந்தவர் தனக்கு அறை இல்லை என்று அறிந்து அதிர்ச்சி அடைந்து விட்டார்.

அதிருப்தியாக இருக்கிறது
இதுகுறித்து லியாண்டர் கூறுகையில், 6 முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் ஆடியுள்ளேன். ஆனால் எனக்கு தங்கக் கூட அறை இல்லை. ஏமாற்றமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஜீசன் அலி மறுப்பு
இதற்கிடையே, லியாண்டர், போபண்ணாவுடன் தங்க மறுத்து விட்டதாக வெளியாகியுள்ள தகவலை இந்திய அணியின் பயிற்சியாளரும், விளையாடாத கேப்டனுமான ஜீசன் அலி மறுத்துள்ளார்.

இது 7வது ஒலிம்பிக்
லியாண்டருக்கு இது 7வது ஒலிம்பிக் போட்டியாகும். 1996 அட்லாண்டா போட்டியில் அவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிம்பிக்தான் லியாண்டருக்கு கடைசி ஒலிம்பிக் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications