பிரார்த்தனாவைத் திட்டாதீங்கப்பா, அவர் இப்பத்தான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கார்.. சானியா
ரியோ டி ஜெனீரோ: பிரார்த்தனா தாம்ப்ரே அனுபவம் இல்லாதவர். ஒலிம்பிக்கில் அவர் மோதியது ஜாம்பவான்களை எதிர்த்து. எனவே எங்களது தோல்விக்கு அவரைக் காரணம் கூறுவது தவறு என்று சானியா மிர்ஸா கூறியுள்ளார்.
இந்தத் தோல்வியால் யாரும் மனம் உடைந்து விட வேண்டாம். இன்னும் கலப்பு இரட்டையர் சுற்று உள்ளது. அதில் நிச்சயம் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் சானியா கூறியுள்ளார்.
ஒலிம்பிக் டென்னிஸ் மகளிர் இரட்டையர் போட்டியில் சானியா - பிரார்த்தனா ஜோடி, சீன ஜோடியிடம் தோல்வியுற்றது. தற்போது இந்தியாவுக்கு கலப்பு இரட்டையர் பிரிவில் மட்டுமே வாய்ப்புள்ளது குறிப்பிடத்தகக்து.

முயற்சிகள் தொடரும்
சானியா மிர்ஸா தோல்விக்குப் பின்னர் கூறுகையில், இந்தியா தங்கத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளது. நிச்சயம் எங்களது முயற்சிகள் தொடரும். சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தோம். கடைசியில் அது பலன் தராமல் போய் விட்டது. ஆனால் இன்னும் நமக்கு வாய்ப்பு உள்ளது.

விளையாட்டில் எதுவும் உறுதி இல்லை
விளையாட்டில் எப்போதுமே எதுவுமே உறுதி இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் சிறப்பாக முயற்சிக்க வேண்டும். போராட வேண்டும். கடைசியில் என்ன கிடைக்கிறதோ அதுதான்.

பிரார்த்தனாவைத் திட்டாதீங்க
பிரார்த்தனாவைத் திட்டாதீங்க. அவர் சர்வதேச அளவில் 190வது இடத்தில் இருப்பவர். டாப் 50க்குள் உள்ள வீராங்கனைகளுடன் இப்போதுதான் அவர் முதல் முறையாக மோதுகிறார். நாங்கள் விளையாடியது 2.44 மணி நேரம் மட்டுமே.

தலை சிறந்தவர்களுடன் மோதுவது எளிதல்ல
உலகின் தலை சிறந்த வீராங்கனைகளுடன் மோதுவது எளிதான காரியமல்ல. இது மிகக் கடுமையான போட்டி. அதனால்தான் இது ஒலிம்பிக்ஸ். நிச்சயம் நாங்கள் பதக்கத்திற்காக முயல்வோம். கிடைக்காவிட்டால் அது வருத்தம் தரக் கூடியதுதான். ஆனால் நாங்கள் (ரோஹன், சானியா) முழு மனதுடன் இதயப்பூர்வமாக முயல்வோம்.

இன்னும் நம்பிக்கை இருக்கிறது
நமது ஒலிம்பிக் கனவு முடிந்து போய் விடவில்லை. இன்னும் கலப்பு இரட்டையர் போட்டி உள்ளது. நிச்சயம் அதில் நாம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

சச்சினுக்கு தேங்க்ஸ்
சச்சின் இங்கு வந்திருப்பது, இந்தப் போட்டியைப் பார்த்தது மகிழ்ச்சி தருகிறது. பெருமையாக உணர்கிறோம். அவர் மேலும் சில நாட்கள் இங்கிருந்து நமது டென்னிஸ் ஆட்டத்தைப் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசையாகும் என்றார் சானியா.

லியாண்டர் மாபெரும் வீரர்
லியாண்டர் பயஸ் மாபெரும் வீரர். எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய உந்து சக்தி. ஒரு ஒலிம்பிக் போட்டியில் விளையாடினாலே பெரிது. ஆனால் அவர் 7வது ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார். லண்டன் போட்டியோடு அவரது கதை முடிந்தது என்றார்கள். ஆனால் மீண்டு வந்தார். எனவே அவர் அடுத்த போட்டியிலும் கூட விளையாடலாம். அவரது டென்னிஸ் வாழ்க்கை முடிந்து விட்டதாக நான் கருதவில்லை என்றார் சானியா.


Click it and Unblock the Notifications