இப்பவாவது ஏடிபியையும் டபள்யூடிஏவையும் ஒண்ணா சேர்த்து வலிமையாக்குங்கப்பா!
பேசல் : டென்னிசில் தனித்தனியாக செயல்பட்டுவரும் ஏடிபி மற்றும் டபள்யூடிஏ இரண்டையை ஒன்றாக சேர்த்து வலிமையாக மாற்ற வேண்டும் என்று சர்வதேச டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக தனித்தனியாக செயல்பட்டு வரும் ஏடிபி மற்றும் டபள்யூடிஏவை இந்த நெருக்கடி நேரத்தில் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து நிர்வாகங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதனிடையே ரோஜர் பெடரரின் இந்த கோரிக்கைக்கு நிக் கிர்கியோஸ் மற்றும் சிமோனா ஹாலேப் போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

20 கிராண்ட் ஸ்லாம் வென்ற முதன்மை வீரர்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்விஸ் வீரர் ரோஜர் பெடரர், தன்னுடைய சிறப்பான விளையாட்டின்மூலம் பல கோப்பைகளை வென்றவர். குறிப்பாக 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இவரது தனித்துவமான ஆட்டத்தை காண்பதற்கெனவே உலக அளவில் பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஒன்றிணைக்க கோரிக்கை
இந்நிலையில் டென்னிசில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக தனித்தனியே செயல்பட்டுவரும் ஏடிபி மற்றும் டபள்யூடிஏ ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று ரோஜர் பெடரர் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார். வீரர்கள், ரசிகர்களின் இந்த நீண்டநாள் கோரிக்கையை தற்போது நிறைவேற்ற சர்வதேச டென்னிஸ் நிர்வாகத்தை அவர் கோரியுள்ளார்.

டென்னிஸ் வலிமையாக வேண்டும்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக விம்பிள்டன் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏடிபி மற்றும் டபள்யூடிஏ ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டால், டென்னிஸ் விளையாட்டு மேலும் வலிமையானதாக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் குழப்பம் நீங்கும்
ஆண்கள் மற்றும் பெண்கள் டென்னிஸ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள பெடரர், இதன்மூலம் போட்டிகளை ஒருங்கிணைக்க சொல்லவில்லை என்றும் நிர்வாகத்தை ஒன்றுபடுத்தி வலிமைப்படுத்தவே தான் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். தற்போதுள்ள இந்த இரட்டை நிர்வாகங்கள் மூலம் ரசிகர்கள் ரேங்கிங் முறை உள்ளிட்டவற்றில் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சக வீரர்கள் ஆதரவு
இதன்மூலம் டென்னிஸ் உலகில் வலிமையற்று காணப்படும் இரண்டு நிர்வாகங்களை இந்த நெருக்கடி நேரத்தை பயன்படுத்தி வலிமையாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறைகூவலுக்கு ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் மற்றும் சிமோனா ஹாலேப் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications