உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோற்றதற்காக, குறிப்பாக கோஹ்லி 1 ரன்னில் அவுட்டானதற்காக வீண் பழிக்கு ஆளாகிவிட்ட அனுஷ்கா சர்மாவுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் பாலிவுட் மட்டுமல்ல, விளையாட்டுத் துறைப் பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பது:
''ரசிகர்களே... நீங்கள் அனுஷ்காவைக் கிண்டல் செய்வது காமெடியாக இல்லை. உங்கள் முட்டாள்தனத்தைத்தான் காட்டுகிறது. பெண் என்பவள் 'கவனச் சிதைவு'க்கு உதாரணம் இல்லை; வலிமைக்கு எடுத்துக்காட்டு. அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
அப்படியென்றால், மற்ற மேட்ச்சுகளில் விராட் 100 ரன்கள் எடுத்து, இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளுக்கும் அனுஷ்காதான் காரணம் என்று ஏன் யாரும் சொல்லவில்லை? எப்போதுமே வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது. எதுவுமே நிரந்தரம் இல்லை.
உங்களுக்கு இருக்கும் சோகத்தைவிட, சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்களா? தயவுசெய்து அனுஷ்கா ஷர்மாவை இதில் சம்பந்தப்படுத்திக் கிண்டல் செய்வதை விட்டுவிடுங்கள்.
எப்படி இருந்தாலும், இந்திய அணி முட்டி மோதி தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். கேப்டன் தோனி மற்றும் இந்திய வீரர்களே... வருத்தமாகத்தான் இருக்கிறது... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்," என்று கூறியுள்ளார்.