டெல்லி : இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு நேற்று பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று, ட்விட்டரில் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு அதிரடியாக பதில் அளித்து, இந்திய குடிமகள் என பொட்டில் அடித்ததுபோல நிரூபித்து இருக்கிறார் சானியா மிர்சா.
இந்திய வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனினும், இந்தியா சார்பாகவே டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இன்னும் இந்திய குடியுரிமையோடு தான் இருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரை மணந்தாலும், தான் ஒரு இந்தியக் குடிமகள் தான் என பல இடங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், அவரை சீண்டும் வகையில் ஒருவர் ட்விட்டர் தளத்தில், பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 அன்று, "சுதந்திர தின வாழ்த்துக்கள் சானியா மிர்சா. உங்கள் சுதந்திர தினம் இன்றுதானே?" என கேட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா, "இல்லை. என்னுடைய மற்றும் என்னுடைய நாட்டின் சுதந்திர தினம் நாளை தான். என் கணவரின் சுதந்திர தினம் தான் இன்று. உங்கள் குழப்பம் தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன்!! அது இருக்கட்டும், உங்களுடையது எப்போது? ஏனெனில், நீங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறீர்கள்" என கூறினார்.
இந்த அதிரடியான பதில் காரணமாக சானியா மிர்சாவை பலரும் புகழ்ந்து வருகிறார்கள். சமூகவலை தளங்களில் பிரபலங்களிடம் தேவையற்ற கேள்விகளை கேட்பது நாகரிகமல்ல.