டென்னிஸின் நம்பர் ஒன் மகளிர் ஜோடி சானியா - ஹிங்கிஸ் பிரிகிறார்கள்!
டெல்லி: பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் சானியா மிர்சா - சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பிரிய முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழ்பவர் சானியா மிர்சா. இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனையான மார்ட்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து விளையாடி வந்தார்.

இருவரும் அபாரமான ஆட்டத்தால் உலகத் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தனர். குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார்கள். இந்நிலையில் இந்த வருடத்திற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சானியாக மிர்சா தன்னுடைய முன்னாள் ஜோடியான அமெரிக்காவின் பார்போரா ஸ்ட்ரைகோவாவுடன் இணைந்து விளையாடுவது போல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் மார்ட்டினா ஹிங்கிஸ் செக் குடியரசின் கோகோ வான்டேவெகே உடன் இணைந்து விளையாடுகிறார். இதனால் வெற்றி ஜோடியான சானியா-ஹிங்கிஸ் பிரிகிறது.
இந்த தகவலை உறுதி செய்துள்ள சானியா, கடந்த 5 மாதங்களில் நினைத்த அளவுக்கு வெற்றிகளை ஈட்ட முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், டென்னிஸ் உலகில் இது சாதாரணமான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜோடி சேர்ந்த சானியா-ஹிங்கிஸ் ஜோடி, தொடர்ச்சியாக மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியது. ஹிங்கிஸுடன் இணைந்த சானியா, உலகின் முதல்நிலை பெண்கள் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றார்.


Click it and Unblock the Notifications