பிஎன்பி பரிபாஸ் ஓபன், மயாமி ஓபன்: தொடர்ந்து அசத்தும் சானியா-ஹிங்கிஸ் சூப்பர் ஜோடி
மயாமி: அமெரிக்காவில் நடந்த மயாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி கோப்பையை வென்றுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மயாமி நகரில் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்தது. அதில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் போட்டியிட்டார். ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் சானியா, ஹிங்கிஸ் ஜோடி ரஷ்யாவின் எகடரினா மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடியை எதிர் கொண்டது.

இந்த போட்டியில் சானியா ஜோடி ரஷ்ய ஜோடியை 7-5, 7-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது. சானியா, ஹிங்கிஸ் ஜோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக இரட்டையர் பிரிவில் கோப்பை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த பிஎன்பி பரிபாஸ் ஓபன் போட்டியின் இரட்டையர் பிரிவில் சானியா, ஹிங்கிஸ் ஜோடி கோப்பையை வென்றது.
மயாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சும் கோப்பையை வென்றனர். செரினா மயாமி ஓபன் போட்டியில் 8வது முறையும், ஜோக்கோவிச் 5வது முறையும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications