"பிறந்த உடனேயே என் மகன் பெயரில்.." பதறிப் போன சானியா மிர்சா.. சின்ன பையனுக்கு இன்ஸ்டா கணக்கு ஏன்?
ஹைதராபாத்: இந்திய டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டாரான சானியா மிர்சா, தனது மூன்று வயது மகன் இஷான் (Izhaan) பெயரில் தானே இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியது ஏன் என்பது குறித்த காரணத்தை முதல்முறையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் தனது ஹைதராபாத் இல்லம் குறித்து அளித்த பேட்டி ஒன்றில் இதுபற்றிப் பேசிய சானியா, "இஷான் பிறந்த உடனேயே, அவனது பெயரில் 10-க்கும் மேற்பட்ட ரசிகர் பக்கங்கள் (fan pages) இன்ஸ்டாகிராமில் உருவாக்கப்பட்டன. இதைப் பார்த்ததும் நான் உண்மையிலேயே பயந்து போனேன். பிறந்த ஒரு குழந்தைக்காக இத்தனை கணக்குகளா என்று எனக்குப் பதற்றமாக இருந்தது."
"அதன் காரணமாகவே, நானே அவனுக்காக ஒரு அதிகாரப்பூர்வ, வெரிஃபைடு கணக்கைத் தொடங்க முடிவு செய்தேன்," என்று விளக்கமளித்தார். தற்போது இஷானின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். "அவன் என்னை விட அதிகமாகச் சம்பாதிக்கிறான்," என்று சானியா இதுகுறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

மேலும் தனது வீடு குறித்தும் பேசிய அவர், "இந்த வீட்டில் நானும் என் தங்கை அனம் (Anam) 2010-ம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். பட்ஜெட் பிரச்சினைகளால் மெதுவாகக் கட்டப்பட்டது. இது எங்கள் பெற்றோரின் கனவு இல்லம். என் தந்தை ஒரு பில்டர் என்பதால், அவரே இதை வடிவமைத்துக் கட்டினார்," என்றார். வீட்டின் சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்கள் அனைத்தும் தனது தாயார் வரைந்தவை என்றும், ஓடும் குதிரைகளின் ஓவியம் வீட்டிற்கு நல்ல சக்தியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அதை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
"நான் கண்டிப்பான தாய், ஆனால் என் தங்கை அனம் அவனுக்கு முழு செல்லம் கொடுக்கிறார்," என்று மகனை வளர்ப்பது குறித்தும் சானியா பகிர்ந்து கொண்டார். வீட்டின் பின்புறம் ஒரு முழுமையான டென்னிஸ் கோர்ட் இருப்பதாகவும், ஆனால் அங்கே டென்னிஸ் விளையாடுவதை விட பார்ட்டிகள்தான் அதிகம் நடக்கும் என்றும் அவர் சிரித்துக்கொண்டே கூறினார். சானியாவின் இந்த வீடு, அவரைப் போலவே சுவாரஸ்யமான கதைகளால் நிரம்பியுள்ளது.
சானியா மிர்சாவின் வாழ்க்கையில் தற்போது மையமாக இருக்கும் அவரது மகன் இஷான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்குக்கும் சானியாவுக்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, 14 ஆண்டுகளாக விளையாட்டு உலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒன்றாக வலம் வந்தது.
இந்தியா-பாகிஸ்தான் உறவின் அடையாளமாகவும் பார்க்கப்பட்ட இவர்களது திருமணம், சமீபத்தில் முடிவுக்கு வந்தது. சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தைத் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இவர்களது விவாகரத்து செய்தி பொதுவெளியில் உறுதி செய்யப்பட்டது.
இந்த விவாகரத்து குறித்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியது. சோயிப் மாலிக்கின் திருமண அறிவிப்புக்குப் பிறகு, சானியா மிர்சாவின் தந்தை, அவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பே இஸ்லாமிய முறைப்படி 'குலா' மூலம் விவாகரத்து பெற்றுவிட்டதாகத் தெளிவுபடுத்தினார்.
இந்த இக்கட்டான சூழலை சானியா மிர்சா மிகுந்த கண்ணியத்துடன் கையாண்டார். தனது தனிமைக்கு மதிப்பளிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்ட அவர், கடினமான காலகட்டத்தைக் கடந்து, தனது மகனின் நலனில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியிலும், தனது மகனுக்கு ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பது, அவரது சமீபத்திய பேட்டிகள் மூலம் தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications