நடப்பு சாம்பியன் பெடரர் அதிர்ச்சி தோல்வி....அரை இறுதியில் நடால், ஜோகோவிச்!
லண்டன்: விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் கால் இறுதியில் மிகக் கடுமையாகப் போராடிய நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனிடம் 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற செட்களில் அவர் தோல்வியடைந்தார். இந்த நிலையில் ரபேல் நடால் கடும் போராட்டத்துக்குப் பிறகு வென்று அரை இறுதி நுழைந்தார்
டென்னிஸில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி நடந்து வருகிறது. இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் பெடரர், 9வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
2003, 2004, 2005, 2005, 2007 என தொடர்ந்து 5 முறையும், 2009, 2012, 2017லும் சாம்பியன் பட்டத்தை வென்று, அதிக முறை விம்பிள்டன் பட்டம் வென்ற வீரராக பெடரர் உள்ளார்.
இன்று நடந்த கால் இறுதியில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனை சந்தித்தார். முதல் செட்டை 6-2 என சுலபமாக வென்ற பெடரருக்கு இரண்டாவது செட்டில் போராட வேண்டியிருந்தது. 7-6 என வென்றார்.

வெளியேறினார் பெடரர்
அதற்கடுத்த இரண்டு செட்களை 7-5, 6-4 என வென்று ஆன்டர்சன் அதிர்ச்சி அளித்தார். நான்கு மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த ஆட்டத்தில் கடைசி செட்டில் 13-11 என ஆன்டர்சன் வென்று, ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார்.

அரைஇறுதியில் ஜோகோவிச்
இன்று நடந்த மற்றொரு ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 6-3, 3-6, 6-2, 6-2 என்ற செட்களில் ஜப்பானின் கீய் நிஷிகோரியை வென்றார்.

முன்னேருவாரா நடால்
மற்றொரு கால் இறுதியில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவுடன், ஸ்பெயினின் ரபேல் நடால் மோதினார். கடுமையாக போராடி 7-5, 6-7, 4-6, 6-4, 6-4 என்ற செட்களில் நடால் வென்றார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 6-7, 7-6, 6-4, 6-3 என கனடாவின் மிலோஸ் ரோவானிக்கை வென்றார்.

அரை இறுதியில் செரீனா
மகளிர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், லாட்வியாவின் ஜெலீனா ஓஸ்டாபென்கோ, ஜெர்மனியின் ஜூலியா கோர்ஜஸ் ஆகியோர் அரை இறுதிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications