டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆட சானியா மிர்சா அதிருப்தி தெரிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள இந்திய டென்னிஸ் சங்கம், பயஸ்-சானியா ஜோடி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் நேரடியாக தேர்வானார். கலப்பு இரட்டையர் பிரிவில் வைல்டு கார்டு மூலம் நுழைந்த சானியா மிர்சா, பயஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆடுவார் என்று இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது.
ஆனால் வைல்டு கார்டு மூலம் ஒலிம்பிக் போட்டியில் விளையாட அனுமதி கிடைக்கும் வரை அமைதியாக இருந்த சானியா மிர்சா, அதன்பிறகு பயஸ் உடன் ஜோடி சேர அதிருப்தி தெரிவித்தார்.
இந்த நிலையில் சானியா மிர்சாவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள இந்திய டென்னிஸ் சங்கம், ஒலிம்பிக் போட்டியில் விளையாட உள்ள வீரர்கள், வீராங்கனைகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய டென்னிஸ் சங்கத்தின் பொது செயலாளர் பாரத் ஓசா கூறியதாவது,
ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய டென்னிஸ் வீரர்களின் தேர்வு கடந்த 21ம் தேதி நடைபெற்றது. அப்போது லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆட மகேஷ் பூபதி மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் மறுத்துவிட்டார். இதனால் இரட்டையர் பிரிவில் ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற விஷ்ணுவர்தன் உடன் லியாண்டர் பயஸ் ஜோடி சேர்க்கப்பட்டார்.
இந்தியாவின் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சானியா மிர்சா, பெண்கள் இரட்டையர் பிரிவின் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளார். இதனால் சானியாவுக்கு வைல்டு கார்டு இல்லாமல் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் 7வது இடமும், இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தை பெற்றவருமான லியாண்டர் பயசை, சானியா மிர்சாவுடன் ஜோடி சேர்த்தோம். இருவரது தரவரிசைகளை சேர்க்கும் போது, கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் முதல் 12 ஜோடிகளில் இந்த ஜோடி 9வது இடத்தை பிடித்தது.
மேலும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வைல்டு கார்டு அனுமதி பெற்றுள்ள சானியா மிர்சாவுடன் பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் ஜோடி சேர ருஷ்மி சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு முழுக்க முழுக்க வீரர்கள், வீராங்கனைகளின் தகுதி அடிப்படையில் நடைபெற்றது.
சானியா ஒரு சிறந்த வீராங்கனை என்பதை இந்திய டென்னிஸ் சங்கம் அறிந்துள்ளது. மேலும் நாங்கள் அனைத்து வீரர், வீராங்கனைகள் திறமைகளை மதிக்கிறோம். சானியா-பயஸ் ஜோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் என்று நம்புகிறோம்.
இந்திய வீரர்கள் தங்கள் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து, ஒருங்கிணைந்து விளையாட வேண்டும். நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டு தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, பதக்கங்களை வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.