மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி, பக்ரைனின் மார்க் நேவல்ஸ் ஜோடி முன்னேறியது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடரின் ஆண்கள் இரட்டையர் அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பக்ரைனின் மார்க் நேவல்ஸ் ஜோடி, போலந்தின் லூகஸ் கியுபட், ஆஸ்திரியாவின் ஆலிவர் மராச்சி ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 6-3 என வென்று அசத்திய பூபதி ஜோடி அடுத்த செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றியது. 6-3, 6-1 என்ற செட்களில் வென்று பைனலுக்குள் நுழைந்தது.
அரையிறுதியில் பம்பிரி...
சிறுவர்களுக்கான ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் யுகி பம்பிரி 6-1, 7-5 என ஜெர்மனியின் ரிச்சர்டு பெக்கரை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
பைனலில் செரினா-சபினா மோதல்...
பெண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற செட்களில் ரஷ்யாவின் எலினா டெமன்டிவாவை வீழ்த்தினார்.
இரண்டாவது அரையிறுதியில் ரஷ்யாவின் டினரா சபினா 6-3, 7-6 என்ற செட்களில் மற்றொரு ரஷ்ய வீராங்கனையான வெரா ஜூவனரீவாவை வென்றார். பைனலில் சபினா, செரினாவுடன் மோதுகிறார்.