
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போப்பண்ணா ஜோடி, பிரான்ஸின் ஜூலியன் பென்னட்டு, ரிச்சார்ட் கேஸ்கியுட் ஜோடியை எதிர்கொண்டது.
இந்திய ஜோடி துவக்கம் முதலே புள்ளிகளை சேர்க்க தடுமாறியது. முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய பிரான்ஸ் ஜோடி 39 நிமிடங்களில் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றியது. 2வது செட்டில் சுதாரித்து கொண்ட இந்திய ஜோடி, துவக்கத்தில் 3-0 என்ற முன்னிலை வகித்தது. ஆனால் அதன்பிறகு அடுத்தடுத்து புள்ளிகளை பெற்ற பிரான்ஸ் ஜோடி 6-4 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றியது.
போட்டியின் முடிவில் பிரான்ஸ் ஜோடி 77 நிமிடங்களில் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் 2வது சுற்று போட்டியில் தோல்வி அடைந்த இந்தியாவின் பூபதி, போப்பண்ணா ஜோடி ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இருந்து வெளியேறியது.
முன்னதாக ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியை தேர்வு செய்ததில் பல சர்ச்சைகளும், குளறுபடிகளும் ஏற்பட்டன. அனுபவம் வாய்ந்த லியாண்டர் பயஸ் உடன் சேர்ந்து விளையாட மறுத்த பூபதி, போபண்ணாவை ஜோடியாக தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்த ஜோடியால் ஒலிம்பிக் போட்டியின் 2வது சுற்றை கூட தாண்ட முடியவில்லை.