மான்ட்ரியல்: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலுக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி ஜோடி முன்னேறியுள்ளது.கனடாவின் மான்ட்ரியல் நகரில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகமாசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, கனடாவின் டேனியல் நெஸ்டர், செர்பியாவின் நேனத் ஜிமோன்ஜிக் ஜோடியை எதிர்கொண்டது.ஆட்டம் துவக்கத்தில் இருந்தே பரபரப்பாக இருந்தது. இதில் முதல் செட்டை பூபதி ஜோடி 5-7 என பறிகொடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஜோடி இரண்டாவது செட்டை 6-2 என எளிதாக வென்று அசத்தியது.மூன்றாவது செட்டில் இரு ஜோடிகளும் கடுமையாக போராடின. இதையடுத்து ஆட்டம் டை-பிரேக்கருக்கு சென்றது. இதை பூபதி ஜோடி 10-4 என கைப்பற்றியது. இறுதியில் 5-7, 6-2, 10-4 என்ற செட் கணக்கில் வென்றது.பூபதி ஜோடி பைனலில் பெலாரசின் மேக்ஸ் மிரின்யி, இஸ்ரேலின் ஆன்டி ராம் ஜோடியுடன் மோதுகிறது.