சின்சினாட்டி: சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவி்ன் மகேஷ் பூபதி ஜோடி தகுதி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, ஸ்பெயினை சேர்ந்த பெலிசியானோ லோபஸ், பெர்னாண்டோ வெர்டஸ்கோ ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டில் கிடைத்த வாய்ப்பை பூபதி ஜோடி தவறவிட்டது. அதை 5-7 என கோட்டைவிட்டது. இதையடுத்து இரண்டாவது செட்டில் சுதாரித்து விளையாடியது. புயல்வேக சர்வீஸ்களால் மிரட்டிய பூபதி ஜோடி 6-4 என கைப்பற்றியது.
இரு ஜோடிகளும் தலா ஒரு செட்டை கைப்பற்ற காலிறுதி வாய்ப்பு யாருக்கு என்பதை உறுதி செய்யும் மூன்றாவது செட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதை பூபதி ஜோடி நீண்ட போராட்டத்துக்கு பின் 12-10 என கைப்பற்றியது. இறுதியில் 5-7, 6-4, 12-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
காலிறுதியில் இந்த ஜோடி பிரான்சின் மைக்கேல் லோட்ரா, ஜோ பில்பிரட் டோங்கா ஜோடியை சந்திக்கிறது.