டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பயஸுடன் மகேஷ் பூபதி விளையாட மறுத்ததைத் தொடர்ந்து போபண்ணாவும் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
லியாண்டர் பயஸுடன் விளையாட முடியாது என்று மகேஷ் பூபதி கூறியிருந்தார். இதற்கு இந்திய டென்னிஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. பூபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பூபதியின் ஜோடியான போபண்ணாவும் பயஸுடன் விளையாட மறுத்திருக்கிறார். இதனிடையே விளையாட்டுத் துறை அமைச்சர் மக்கானுக்கு மகேஷ் பூபதி இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்திய டென்னிஸ் அணி மீது புகார் வாசித்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் தலையிடுமாறும் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சர்ச்சை நீடிப்பால் பயஸுடன் இணைந்து விளையாடப் போகும் வீரர் யார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்திய டென்னிஸ் சங்கம் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு அணியை மட்டும் அனுப்ப முடியும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்கு அமைச்சர் மக்கான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் 2 அணிகள் பங்கேற்க முடியும் என்ற நிலையில் ஏன் டென்னிஸ் சங்கம் அடம்பிடிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.