பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லுகாஸ் லூகி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் ஒற்றையரில் ரஷ்யாவின் கஸ்னெட்சோவா கோப்பை வென்றார்.
நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் பாரிசில் நடக்கிறது. நேற்று ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லுகாஸ் லூகி ஜோடி, தென் ஆப்ரிக்காவின் வெஸ்லே மூடி, பெல்ஜியத்தின் டிக் நார்மேன் ஜோடியை எதிர் கொண்டது.
இதில் பயஸ் ஜோடி 3-6, 6-3, 6-2 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இது லியாண்டர் பயஸ் ஆண்கள் இரட்டையரில் கைப்பற்றும் ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
இதுவரை மொத்தம் 9 கிரான்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் பயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
1999ம் ஆண்டு விம்பிள்டன் இரட்டையர், விம்பிள்டன் கலப்பு இரட்டையர், பிரெஞ்சு இரட்டையர் பட்டங்களை வென்றார் பயஸ்.
2001ம் ஆண்டு பிரெஞ்சு இரட்டையர் பட்டத்தை வென்றார்.
2003ல் ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றார். அதே ஆண்டில் விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பட்டத்தையும் பயஸ் தட்டினார்.
2006ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இரட்டையர் பட்டத்தை வென்றார்.
2008ல் அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பட்டம் பயஸுக்குக் கிடைத்தது.
இந்த ஆண்டில் முதல் பட்டமாக பிரெஞ்சு ஓபன் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளார் பயஸ்.
கஸ்னெட்சோவாவுக்கு கோப்பை...
பெண்கள் ஒற்றையர் பைனலில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா கஸ்னெட்சோவா, சகநாட்டு வீராங்கனையும் தரவரிசையில் முதலி்டத்தில் இருப்பவருமான டினரா சபினாவை எதிர் கொண்டார்.
இதில் கஸ்னெட்சோவா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையைக் கைப்பற்றினார். இது அவர் கைப்பற்றும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.