10 வருடங்களைத் தாண்டியும்.. இன்னும் ஓயாத சானியா அலை!
டெல்லி: சானியா மிர்ஸா டென்னிஸ் ஆட வந்து 10 வருடங்களைத் தாண்டி விட்டார். ஆனாலும் அவரது மவுசு இன்னும் குறையவில்லை என்று கூறுகிறார்கள்.
எந்த வேகத்தி்ல் புகழேணியில் ஏறினாரோ அதே அளவிலான வேகத்தில் சர்ச்சைகளையும் சந்தித்தவர் சானியா.
அவரது டிரஸ், மேக்கப் உள்ளிட்ட அவர் செய்த அத்தனையும் மாறு பார்வையுடன் பார்க்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
10 வருட டென்னிஸ் வாழ்க்கையில் இந்திய இளம் டென்னிஸ் வீராங்கனைகளுக்கு பெரும் உத்வேதமாக இருந்துள்ளார் சானியா என்பது முக்கியமானது. சானியா சந்தித்த சங்கடங்கள் - சர்ச்சைகள்.. ஒரு ரவுண்டப்.

விம்பிள்டனில் வெற்றி- உடையால் சிக்கல்
ஜூனியர் விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்றவர் சானியா மிர்ஸா. ஆனால் அந்தப் போட்டிக்காக அவர் போட்டிருந்த உடைதான் மதவாதிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இப்படியெல்லாமா ஒரு முஸ்லீம் பெண் உடை அணிவது என்று சர்ச்சையைக் கிளப்பி விட்டனர் சிலர்.

காதலருடன் நிச்சயதார்த்தம்.. ஆனால் கல்யாணம் ரத்து
சிறு வயது முதலே தனது குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி வந்த தனது பாய் பிரண்ட் சோரப் மிர்ஸாவுடன், சானியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் கல்யாணம் நடைபெறவில்லை. படு வேகமாக இந்த திருமணம் ரத்தாகிப் போனது.

தேசியக் கொடிக்கு அருகே கால்
ஒரு போட்டியில் சானியா மிர்ஸா, தேசியக் கொடிக்கு எதிரே கால் வைத்தபடி இருந்ததாக புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மார்பிங் செய்யப்பட்ட நிர்வாணப் படங்கள்
திடீரென இணையதளங்களில் சானியா மிர்ஸாவின் நிர்வாணப் படங்கள், அரை நிர்வாணப் படங்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தின. ஆனால் அவை அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டவை என்பது பின்னர் தெரிய வந்தது.

சோயப் மாலிக்குடன் திருமணம் - அதிலும் சர்ச்சை
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குடன் சானியாவுக்கு திருமணம் நிச்சயமானதுமே சர்ச்சைகளும் கூடவே வந்தன. இந்து மத அமைப்புகள் பல இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. சோயப் மாலிக்கின் முதல் மனைவி நான் என்று ஒரு பெண் கிளம்பி வந்தார். பெரும் போராட்டத்துக்குப் பின்னர்தான் திருமணம் நடந்தது.

மறுபடியும் உடையால் பிரச்சினை
இதேபோல ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சானியா, போட்டிருந்த ஆடையால் மறுபடியும் சர்ச்சை ஏற்பட்டது.

2003 முதல்
2003ம் ஆண்டு முதல் டென்னிஸ் ஆடி வருகிறார் சானியா மிர்ஸா. ஏபி டூரிசம் ஹைதராபாத் ஓபன் டென்னிஸ் போட்டிதான் அவர் ஆடிய முதல் போட்டியாகும்.

இன்னும் நம்பர் ஒன் வீராங்கனை இவரே
இந்தியாவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் இருந்து வரும் வீராங்கனை சானியா மிர்ஸா.

உலக அளவிலும் சாதனை
சர்வதேச அளவில் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 27வது ரேங்க் வரை வந்தவர் சானியா. அதேபோல இரட்டையர் பிரிவில் 7வது ரேங்க் வரை வந்தவர்.

சம்பாதிப்பதிலும் கில்லாடி
அதேபோல இந்திய டென்னிஸ் வீராங்கனைகளிலேயே 10 லட்சம் டாலருக்கு மேல் ஊதியம் ஈட்டிய முதல் வீராங்கனை இவர்தான்.


Click it and Unblock the Notifications