டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 2 டென்னிஸ் அணிகள் அனுப்பப்படுகின்றன. லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாட சோம்தேவ் தேவ்வர்மா விருப்பம் தெரிவித்திருப்பதால் பயஸ்- சோம்தேவ் ஒரு அணியாகவும் மகேஷ் பூபதி- போபண்ணா இணைந்து ஒரு அணியாகவும் விளையாட உள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பயஸுடன் இணைந்து விளையாட முதலில் மகேஷ் பூபதி மறுப்புத் தெரிவித்திருந்தார். பின்னர் போபண்ணாவும் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மத்திய அமைச்சர் இதில் தலையிடவும் வலியுறுத்தப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் மக்கென்னும்கூட 2 அணிகளை அனுப்ப வாய்ப்பு இருக்கும்போது அதனையே பின்பற்றலாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பயஸுடன் விளையாடப் போவது யார் என்ற கேள்வி இருந்து வந்தது. தாம் உடல் தகுதி பெற்றிருப்பதால் பயஸுடன் இணைந்து விளையாட தயார் என்று சோம்தேவ் தேவ்வர்மா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்தியா சார்பில் 2 டென்னிஸ் அணிகளை அனுப்ப இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்திருக்கிறது. லியாண்டர் பயஸ்- சோம்தேவ் தேவ்வர்மா ஒரு அணியாகவும் மகேஷ் பூபதி- போபண்ணா இணை ஒரு அணியாகவும் களம் இறங்க உள்ளனர்.