
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியை, இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது. இதில் இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், நேரடியாக தகுதி பெற்றார். ஆனால் இரட்டையர் ஆண்கள் போட்டிகளில் பயஸ் உடன் விளையாட இந்தியாவின் முன்னணி வீரர்களான மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோர் மறுத்துவிட்டனர்.
இதனால் இளம்வீரரான விஷ்ணு வர்தன் உடன் லியாண்டர் பயஸ் ஜோடி சேர்க்கப்பட்டார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இப்படி என்றால், கலப்பு இரட்டையர் பிரிவில் சானியாவால் பிரச்சனை. மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி வரும் சானியா மிர்சா, ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர்க்கப்பட்டார்.
இதில் அதிருப்தி அடைந்த சானியா மிர்சா, இந்திய டென்னிஸ் சங்கம் பூபதி-சானியா ஜோடியின் சாதனைகளை அவமதித்து, தன்னை இழிவுப்படுத்தியதாக கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மெளனமாக இருந்து வந்த லியாண்டர் பயஸ் தற்போது தனது கருத்துகளை கொட்டி தீர்த்துள்ளார். நான் டென்னிஸ் விளையாட மட்டும் தான் வந்தேன். அரசியலில் ஈடுபட வரவில்லை என்று பயஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது லண்டன் விம்பிள்டன் போட்டிகளில் ஆடி வரும் லியாண்டர் இதுகுறித்துக் கூறுகையில்,
நான் இங்கு அரசியலில் ஈடுபட வரவில்லை. விளையாட தான் வந்துள்ளேன். ஆனால் சமீபகாலமாக விளையாட்டு போட்டிகளுக்கு உள்ளே சில விளையாட்டுகள் நடைபெறுவதை கண்டு வருந்துகிறேன். நான் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய நாட்டிற்காக விளையாடி வருகிறேன். தற்போது இந்தியாவிற்காக 6வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளேன்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள என்னை, 207வது இடத்தில் உள்ள விஷ்ணு வர்தன் உடன் ஜோடி சேர்த்திருப்பதால் நான் வருத்தம் அடையவில்லை. இந்திய டென்னிஸ் சங்கம் தேர்வு செய்த அணியுடன் நான் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக விளையாட உள்ளேன்.
சிலர் என் மீது குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இது போன்ற சில சர்ச்சைகள் எழுவது சகஜம் தான். எனது கடின உழைப்பு கண்டு நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால் சிலர் என்னை மதிப்பதில்லை. இது அவர்களிடையே உள்ள குறையை தான் காட்டுகிறது.
விஷ்ணுவர்தனுக்கு புல் தரையில் விளையாடுவதற்கு ஏற்ற ஷூ உள்ளதா என்பது கூட தெரியவில்லை. இருப்பினும் இளம் வீரரான அவருடன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு அனுபவ வீரராக எனது திறமைகளை அவருடன் பகிர்த்து கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.