பிரஞ்சு ஓபன்: காயம் காரணமாக சானியா விலகல்
டெல்லி: காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாரிசில் நடக்கவுள்ள பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சானியா மிர்சாவுக்கு வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தை சரிசெய்வதற்காக கடந்த மாதம் 10ம் தேதி அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடந்தது.
இதைத்தொடர்ந்து காயத்தை ஆற்றுவதற்கான சிகிச்சையை அவரது பிசியோதெரபிஸ்ட் ரேணுகா பின்டோ அளித்துவருகிறார்.
கடந்த மே 5ம் தேதியன்று சானியா கையில் போடப்பட்டிருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 25ம் தேதி பாரிசில் தொடங்கவுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் சானியா.
இது குறித்து சானியா மிர்சா கூறுகையில், இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு வருந்துகிறேன்.
சில விஷயங்கள் நமது சக்திக்கு மீறியவையாக இருக்கின்றன. குணமானவுடன் விரைவில் விளையாட்டுக்குத் திரும்புவேன் என்றார்.
பிரெஞ்சு ஓபனில் மூன்று முறை விளையாடியுள்ள சானியா மிர்சா இதுவரை இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றதில்லை.


Click it and Unblock the Notifications