
லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் முர்ரேதான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். இந்தப் போட்டியில் 6-2,6-1,6-4 என்ற செட் கணக்கில் முர்ரே அசத்தல் வெற்றி பெற்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் எந்த மைதானத்தில் பெடரர் தம்மை தோற்கடித்தாரோ அதே மைதானத்தில் இப்போது பழிக்குப் பழியாக முர்ரே சரித்திரம் படைத்திருக்கிறார். ஆம் 1908-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் தங்கம் வென்றுள்ள முதலாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமை முர்ரேவுக்குக் கிடைத்திருக்கிறது.
மேலும் இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பெடரருக்குக் கிடைக்க வேண்டிய கேரியர் கோல்டன் ஸ்லாம் என்ற வாய்ப்பும் பறிபோய்விட்டது. அதாவது 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் இந்த கேரியர் கோல்டன் ஸ்லாம் என்பதாகும்.
வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் அர்ஜென்டீனாவின் ஜுவன் மார்ட்டின் 7-5, 6-4 நேர் செட்களில் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.