பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் கஸ்னெட்சோவா ஆகியோர் காலிறுதிக்கு தகுதிபெற்றனர்.
நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் இரண்டாவதான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லுகாஸ் டவுகி ஜோடி, பிரேசிலின் புருனோ சோயர்ஸ், ஜிம்பாப்வேயின் கெவின் உலியட் ஜோடியுடன் மோதியது.
இதில் சூப்பராக விளையாடிய பயஸ் ஜோடி முதல் செட்டை 6-2 என எளிதாக வென்றது. அடுத்த செட்டை சிறிய போராட்டத்துக்கு பின் 7-6 என கைப்பற்றியது. இறுதியில் 6-2, 7-6 என வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
காலிறுதிக்கு முன்னேறினார் செரினா...
பெண்கள் பிரிவில் நடந்த ஒற்றையர் நான்காவது சுற்றுப்போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6-1, 6-2 என கனடாவின் அலெக்சான்ட்ரியா ஓஸ்னியாக்கை வென்றார். ரஷ்யாவின் ஸ்வெட்லானா கஸ்னெட்சோவா 6-4, 1-6, 6-1 என போலந்தின் அக்னிஸ்கா ராட்வென்ஸ்காவை தோற்கடித்தார். காலிறுதியில் கஸ்னெட்சோவா, செரினாவுடன் மோதுகிறார்.
முன்னதாக நேற்று ரஷ்யாவின் மரியா ஷரபோவா, டினரா சபினா, சுலோவேக்கியாவின் டாமினிக்கா சிபுல்கோவா, பெலாரசின் விக்டோரியா அசரங்கா ஆகியோரும் காலிறுத்திக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நடால் அதிர்ச்சி தோல்வி...
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர்-1 வீரர் ரபெல் நடால் 2-6, 7-6, 4-6, 6-7 என்ற செட்களில் சுவீடனின் ராபின் சோடர்லிங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.