டென்னிஸ்: பெடரர் ஜோடியிடம் பயஸ்-பூபதி தோல்வி
பெய்ஜிங்: பதக்கம் பெற்றுத் தருவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய டென்னிஸ் இரட்டையர்களான லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடி, பெடரர் ஜோடியிடம் காலிறுதிப் போட்டியில் தோல்வியுற்றது.
பதக்க நம்பிக்கையூட்டும் இந்திய வீரர்கள் வரிசையில் பயஸ் - பூபதி ஜோடி இருந்தது. இந்த நம்பிக்கை நேற்று தகர்ந்து போனது.
சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - ஸ்டானிஸ்லாஸ் வாரின்கா ஜோடியை, இரட்டையர் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி சந்தித்தது.
இப்போட்டியில் 2-6, 4-6 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி தோல்வியுற்று இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இப்போட்டியில் இந்திய ஜோடியை, அனைத்து அம்சங்களிலும் பெடரர் ஜோடி தோற்கடித்தது.
போட்டியின் முடிவு குறித்து பயஸ் பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். போட்டிமுடிவுக்குப் பின்னர் அவர் பேசுகையில், இது இதயத் துடிப்பை நிறுத்தும் முடிவு. மிகக் கடுமையாக உழைத்திருந்தோம். இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினோம். இந்தப் பதக்கத்திற்காக கடுமையாக போராடினோம் என்றார்.
இப்போட்டி நேற்று முன்தினம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications