டெல்லி: இந்தியாவில் விளையாடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக சானியா மிர்ஸா கூறியிருப்பது தவறான முடிவு. விமர்சகர்களைப் பார்த்து பயந்து இதுபோன்ற முடிவு எடுப்பது சரியல்ல என்று முன்னணி வீரர் லியாண்டர் பயஸ் கூறியுள்ளார்.
இந்தியாவில் தான் விளையாடினால், தேவையற்ற சர்ச்சைகள் வருகிறது. எனவே இந்த ஆண்டு இந்தியாவில் எந்தப் போட்டியிலும் விளையாடப் போவதில்லை. வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே விளையாடப் போவதாக சானியா மிர்ஸா கூறியுள்ளார்.
இதற்கு லியாண்டர் பயஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பயஸ் கூறுகையில், விளையாட்டை விட தனி நபர்கள் பெரியவர்கள் அல்ல. சொந்த ஊரில், சொந்த நாட்டு ரசிகர்கள் முன்பு விளையாடுவது எந்த ஒரு வீரருக்கும், வீராங்கனைக்கும் மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம்.
சர்ச்சைகள், விமர்சனங்கள் விளையாட்டுத் துறையினருக்கு புதிய விஷயமல்ல. அவை நம்மோடு கூடவே வரும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி சமாளிப்பது, கையாளுவது என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு புகழ் பெற்ற வீரர், வீராங்கனைகளின் பின்னாலும் ஏதாவது ஒரு சர்ச்சை இருக்கத்தான் செய்யும். ஆனால் அதற்காக அவர்கள் சோர்ந்து போவதில்லை. மாறாக அதை எப்படி கையாளுவது என்பதுதான் முக்கியம் என்றார் பயஸ்.
பயஸின் முன்னாள் டபுள்ஸ் பார்ட்னரும், முன்னணி வீரருமான மகேஷ் பூபதியின் குளோபஸ்போர்ட் நிறுவனம்தான், சானியா மிர்ஸாவின் மேனேஜராக உள்ளது என்பது நினைவிருக்கலாம்.