மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், கலப்பு இரட்டையர் காலிறு போட்டிக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி முன்னேறியுள்ளது.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.
இன்று நடந்த கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி 6-1, 6-2 என ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ரோடினோவா, ஸ்டீபன் ஹஸ் ஜோடியை எளிதாக வென்றது.
இதன் மூலம் இந்திய ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
அதேபோல, கலப்பு இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6-4, 4-6, 10-7 என ஜெர்மனியின் அனா குரோன்பீல்டு, செர்பியாவின் நேனத் ஜிமான்ஜிக் ஜோடியை வீழ்த்தியது.
சிறுவர்களுக்கான முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி 4-6, 6-1, 8-6 என மெக்சிகோவின் சான்சஸ் டெல்பினை வென்றார்.
காலிறுதியில் பெடரர்...
ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4-6, 6-7, 6-4, 6-4, 6-2 என கடும் போராட்டத்துக்கு பின் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில் 'நம்பர் ஒன்' வீராங்கனை செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச் 1-6, 4-6 என பிரான்சு வீராங்கனை மரியன் பர்டோலியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்ற போட்டிகளில் ரஷ்யாவின் டினரா சபினா, ரஷ்யாவின் வெரா ஜூவனரீவா ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றனர்.