ஒலிம்பிக்: காயமடைந்து வெளியேறிய சானியா

இந்தியாவின் பதக்க நம்பிக்கையூட்டும் போட்டிகளில் டென்னிஸும் ஒன்று. லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா, சுனிதா ராவ் என இந்தியாவுக்கு நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள் இன்று முதல் தங்களது போட்டிகளை தொடங்கியுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், சானியா மிர்ஸா இன்று செக் நாட்டின் இவெடா பெனிசோவாவை சந்தித்தார். ஆனால் இந்தப் போட்டி மொத்தமே 46 நிமிடங்கள்தான் நீடித்தது.
முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக் கணக்கில் நழுவ விட்டிருந்த சானியா இரண்டாவது செட்டில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்தபோது அவருக்கு கையில் வலி எடுத்தது. இதனால் விளையாட முடியாமல் துடித்தார் சானியா.
வலி பொறுக்க முடியாமல் அழ ஆரம்பித்த சானியா போட்டியிலிருந்து விலகுவதாக கண்ணீருடன் அறிவித்தார். இதையடுத்து செக் வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முதல் சுற்று ஆட்டத்திலேயே சானியா காயமடைந்து வெளியேறியிருப்பது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. காயத்தால் அவதிப்படும் சானியா, இரட்டையர் போட்டியில் விளையாடுவாரா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. நாளை அவரும் சுனிதா ராவும் இணைந்து பிரான்ஸ் ஜோடியான தாதியானா கோலோவின், பாலின் பாராமென்டியர் ஜோடியை எதிர்த்து முதல் சுற்று ஆட்டத்தில் ஆடவுள்ளனர்.
பெனிசோவாவுடன் இதற்கு முன்பு மூன்று முறை சானியா மோதியுள்ளார். மூன்றிலுமே சானியா தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் சானியாவுக்கு முதல் ஒலிம்பிக்ஸ். இந்த நிலையில், முதல் ஆட்டத்திலேயே விளையாட முடியாமல் வெளியேறியது சானியாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications