Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சானியாவை சமாதானப்படுத்த அவரது அம்மாவுக்கு மேனேஜர் பதவி கொடுத்த டென்னிஸ் சங்கம்!

Nasima Mirza with Sania
டெல்லி: ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்திய மகளிர் டென்னிஸ் அணியின் மேலாளராக சானியா மிர்ஸாவின் அம்மா நசீமா மிர்ஸாவை நியமித்துள்ளது அகில இந்திய டென்னிஸ் சங்கம். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மகேஷ் பூபதிக்குப் பதில் லியாண்டர் பயஸுடன் தன்னை ஆட உத்தரவிட்டுள்ள டென்னிஸ் சங்கம் மீது சானியா கடும் அதிருப்தியில் இருந்து வருவதால் அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பை டென்னிஸ் சங்கம் செய்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்திய டென்னிஸ் உலகம் சமீபத்தில் பெரும் சண்டையைச் சந்தித்தது. லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டரும், மகேஷ் பூபதியும் இணைந்து ஆடுவார்கள் என டென்னிஸ் சங்கம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் பூபதி. நான் பயஸுடன் இணைந்து ஆட மாட்டேன், ரோஹன் போபண்ணாவுடன்தான் இணைந்து ஆடுவேன் என்று அறிவித்தார். அதையே போபண்ணாவும் வழிமொழிந்தார்.

இதையடுத்து இளம் வீரர்களுடன் இணைந்து ஆடுமாறு பயஸைக் கேட்டுக் கொண்டது டென்னிஸ் சங்கம். ஆனால் அவர் முடியாது என்று கூறி விட்டார். மேலும் ஒலிம்பிக்கில் தான் பங்கேற்கும் முடிவை மறு பரிசீலனை செய்வதாகவு்ம் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஒரு வழியாக பயஸை சமாதானப்படுத்தி அவரை விஷ்ணுவர்த்தனுடன் இணைந்து ஆட சம்மதிக்க வைத்தனர். அதேபோல பயஸ் விருப்பப்படி கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸாவை இணைத்து விட்டனர். இதற்கு சானியா கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்தார்.

உங்கள் சண்டையில் என்னை பகடைக்காயாக்கி விட்டீர்களே என்று டென்னிஸ் சங்கத்தை ஒரு பிடி பிடித்தார். தான் மகேஷ் பூபதி அல்லது ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து ஆட ஆர்வமாக இருந்ததாகவும், ஆனால் டென்னிஸ் சங்கம் தன்னை பயஸுடன் இணைந்து ஆடுமாறு பணித்துள்ளதாகவும் அவர் குமுறியிருந்தார். இருப்பினும் நாட்டுக்காக தான் பயஸுடன் ஆடுவேன் என்றும் அறிவித்தார்.

அவர் இப்படி்ச சொல்லி விட்டாலும் கூட உள்ளூர இன்னும் கடுப்பாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இரு உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் டென்னிஸ் அணியின் மேலாளராக சானியாவின் அம்மா நசீமாவை அறிவித்துள்ளது டென்னிஸ் சங்கம்.

இந்திய மகளிர் அணியில் சானியா தவிர ருஷ்மி சாட்டர்ஜியும் இருக்கிறார். இருவரும் இணைந்து மகளிர் இரட்டையர் போட்டியில் ஆடவுள்ளனர்.

ஏற்கனவே பெடரேஷன் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் மேனேஜராகப் போயிருக்கிறார் நசீமா மிர்ஸா. இருப்பினும் தற்போதைய அவரது நியமனம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆனால் இந்த சர்ச்சைகளை நிராகரித்துள்ளது டென்னிஸ் சங்கம். இதுகுறித்து டென்னிஸ் சங்க செயலாளர் பாரத் ஓஸா கூறுகையில், பெடரேஷன் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நசீமா மேனேஜராகப் போயிருக்கிறார். இந்திய மகளிர் அணிக்கு அவர்தான் பொருத்தமான மேனேஜராக இருக்க முடியும். எனவேதான் அவரை நியமித்தோம்.

சர்வதேச போட்டிகளின்போது கூட இருந்த அனுபவம் அவருக்கு நிறையவே உள்ளது. எனவே அவர்தான் பொருத்தமானவர் என்று ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தோம் என்றார் ஓஸா.

இந்திய டென்னிஸ் அணியில் தற்போது நிர்வாகிகளின் எண்ணிக்கை 5 பேராக உயர்ந்துள்ளது. இந்திய அணியின் விளையாடாத கேப்டனாக எஸ்.பி.மிஸ்ரா உள்ளார். இவர் போக பயஸின் பயிற்சியாளர் சஞ்சய் சிங், மகேஷ் பூபதி, போபண்ணாவி்ன் பயிற்சி ஆலோசகரான ஷியாமள் வல்லப்ஜி, சோம்தேவ் தேவ்வர்மனின் பிசியோதெரபிஸ்ட் மிலோஸ் கெலசிக் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 11, 2012, 9:55 [IST]
Other articles published on Jul 11, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+