அமெரிக்க ஓபன் டென்னிஸ்-போபன்னா, குரேஷி ஜோடி போராடித் தோல்வி
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் பெற்று புதிய வரலாறு படைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய, பாகிஸ்தான் ஜோடியான ரோஹன் போபன்னா, அய்சாம் உல் ஹக் குரேஷி இணை, இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
6-7 (6), 6-7 (3) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரையன் சகோதரரர்களிடம் இந்திய, பாக் ஜோடி தோல்வியுற்றது.
இந்தியா, பாகிஸ்தான் வீரர்களுக்கு இதுதான் முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாகும். ஆனால் அவர்களது ஆட்டத்தைப் பார்த்தபோது அப்படித் தெரியவில்லை. 16ம் நிலை வீரர்களான இவர்கள் இருவரும், முதல் நிலை வீரர்களான அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையனை கடும் டென்ஷனில் ஆழ்த்தி விட்டார்கள்.
ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில் மயிரிழையில்தான் இந்தியா, பாகிஸ்தான் ஜோடிக்கு வெற்றி கை நழுவிப் போனது.
பிரையன் சகோதரர்களுக்கு இது ஒரு இனிமையான பழிவாங்கலாக அமைந்தது. வாஷிங்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிப் போட்டியில் போபன்னா-குரேஷி ஜோடியிடம் பிரையன் சகோதரர்கள் தோல்வியுற்றிருந்தனர். அதற்கு நேற்று பழி தீர்த்துக் கொண்டு விட்டனர். பிரையன் சகோதரர்களுக்கு இந்த ஆண்டு இது 2வது இரட்டையர் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது 9வது சாம்பியன் பட்டமாகும்.
பட்டத்தை வெல்ல இந்திய, பாகிஸ்கான் ஜோடி தவறினாலும் கூட இரு நாட்டுக்கும் பல செய்திகளைத் தந்து விட்டுச் சென்றுள்ளனர். இரு வீரர்களும் தங்களது டீ சர்ட்டில் stop war start tennis என்ற வாசகத்தை இடம் பெறச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications