ரெக்கார்டு மேல் ரெக்கார்டு.. நம்பர் 1.. யூஎஸ் ஓபன் இறுதியில் ஜோகோவிக் மாபெரும் வெற்றி!
நியூ யார்க் : 2023 யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக்.
இந்தப் போட்டியில் டானில் மெட்வெடேவ்-ஐ சந்தித்தார். அவருக்கு எதிராக 6 - 3, 7 - 6 (5), 6 - 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் ஜோகோவிக்.

தன் 36வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் பங்கேற்ற ஜோகோவிக் அதில் தன் 24 வது வெற்றியை பதிவு செய்துள்ளார். அதன்படி இது அவரது 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
ஏற்கனவே, ஆடவர் டென்னிஸ் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வைத்துள்ளவர் நோவாக் ஜோகோவிக் தான். தற்போது ஆடவர் - மகளிர் இரண்டு பிரிவிலும் அதிக டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வைத்துள்ள மார்கரெட் கோர்ட் (24 பட்டங்கள்) சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும், நான்காவது முறையாக ஒரு ஆண்டில் நடக்கும் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மூன்று பட்டங்களை வென்று இருக்கிறார் ஜோகோவிக்.
2011, 2015, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஒரே ஆண்டில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இந்த சாதனையை செய்துள்ளார். இது வேறு எந்த வீரரும் செய்யாத சாதனை ஆகும். இந்த ஆண்டு இதற்கு முன்னதாக அவர் பிரெஞ்சு ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருந்தார்.
ஜோகோவிக் இதுவரை 10 ஆஸ்திரேலிய ஓபன், 7 விம்பிள்டன், 4 யூஎஸ் ஓபன் மற்றும் 3 பிரெஞ்சு ஓபன் பட்டங்களை வென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications