"அனைத்தையும் தியாகம் செய்யுங்கள்".. 2024 அமெரிக்க ஓபன் வென்ற பின் நெகிழ்ந்த அரினா சபலெங்கா
நியூயார்க்: 2024 அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா வெற்றி பெற்று தனது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அவர் அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெகுலாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் மோதினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த போட்டியின் முடிவில் 7 - 5, 7 - 5 என்ற செட் கணக்கில் அரினா சபலெங்கா வெற்றி பெற்றார்.
இது அவரது முதல் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இந்த ஆண்டு இதற்கு முன் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியிலும் அரினா சபலெங்கா பட்டம் வென்று இருந்தார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த அவர் அதில் கோகோ காஃப்-இடம் தோல்வி அடைந்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது அமெரிக்க ஓபன் பட்டத்தை முதன்முறையாக வென்று சாதனை படைத்து இருக்கிறார். 26 வயதான நிலையில் அரினா சபலெங்கா மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார். அடுத்து வரும் ஆண்டுகளில் அவர் மேலும் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த இறுதிப் போட்டிக்கு முன் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா கால் இறுதியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக்-ஐ வீழ்த்தி இருந்தார். அவர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அரினா சபலெங்கா அவரை இறுதியில் வீழ்த்தினார்.
இந்த இறுதிப் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பின் பேசிய அரினா சபலெங்கா, "கடவுளே, என்னால் பேச முடியவில்லை. பலமுறை நான் அமெரிக்க ஒபனில் வெற்றிக்கு அருகே வந்து இருக்கிறேன். இதை வெல்ல வேண்டும் என்பது எனது கனவு. இறுதியாக இந்த அழகான கோப்பையை நான் வென்று இருக்கிறேன். இந்த கோப்பை எனக்கு மிகப் பெரியது. கடந்த சில வாரங்கள் எனக்கு கடினமானதாக இருந்தது." என்றார்,
மேலும், "இறுதிப்போட்டியில் ஜெசிக்கா தோல்வி அடைந்தது எத்தனை கடினமானது என்பதை எனக்கு தெரியும். ஜெசிக்கா நீ அற்புதமான டென்னிஸ் வீராங்கனை. நிச்சயமாக உனக்கு ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கிடைக்கும். ஒன்று மட்டும் அல்ல, நிச்சயம் அதிகமாக கிடைக்கும். ஆனால், ஒன்றிலிருந்து துவங்கலாம்." என்றார் அரினா சபலெங்கா.
மேலும், "கடந்த ஆண்டில் எனக்கு கிடைத்த கடினமான தோல்விகளை எல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன். இதை வென்றது எளிதாக தோன்றலாம். ஆனால், உங்கள் கனவை நீங்கள் எப்போதும் கைவிடாதீர்கள். கனவு காணுங்கள், அதற்காக கடினமாக உழையுங்கள். உங்கள் கனவுக்காக கடினமாக உழைத்து, எல்லாவற்றையும் தியாகம் செய்தீர்கள் என்றால் ஒரு நாள் உங்களுக்கு அது கிடைக்கும். என்னை குறித்து நானே பெருமையாக உணர்கிறேன். நான் இதை எப்போதும் சொன்னதில்லை." என்றார் அரினா சபலெங்கா.
இந்த கிராண்ட்ஸ்லாம் சீசனில் அரினா சபலெங்கா மொத்தம் 19 போட்டிகளில் விளையாடி அதில் 18 வெற்றிகளை பெற்றுள்ளார். பிரெஞ்சு ஓபனில் இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா
விடம் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தார். விம்பிள்டன் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் தொடர்களில் அரினா சபலெங்கா பங்கேற்கவில்லை.


Click it and Unblock the Notifications