25வது கிராண்ட்ஸ்லாம் கனவு.. மண்ணை அள்ளிப்போட்ட ஆஸ்திரேலிய வீரர்.. கண்ணீரில் கதறிய ஜோகோவிச்!
நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் அதிர்ச்சியை தோல்வியை சந்தித்துள்ளார். 25வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வெல்லும் கனவுடன் ஜோகோவிச் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்கி இருந்தார். ஆனால் 3வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்சை பாபிரினை எதிர்கொண்ட ஜோகோவிச் தோல்வியை தழுவி வெளியேறியுள்ளார்.
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் யுஎஸ் ஓபன் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் 2வது சுற்றிலேயே ஸ்பெய்ன் நட்சத்திர வீரர் அல்காரஸ் தோல்வியடைந்து வெளியேறினார். இதன் காரணமாக யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை ஜோகோவிச் வெல்லவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டது.

ஏனென்றால் தற்போது டென்னிஸ் யுத்தம் அல்காரஸ் - ஜோகோவிச் இடையில் தான் நடந்து வருகிறது. விம்பிள்டன் தொடரில் அல்காரஸ் வென்ற நிலையில், ஒலிம்பிக் தொடரில் அல்காரஸை வீழ்த்தி ஜோகோவிச் பழிதீர்த்தார். இதன் மூலமாக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை முதல்முறையாக கைப்பற்றி ஜோகோவிச் சாதனை படைத்தார்.
அதே எனர்ஜியுடன் 25வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வெல்லும் முனைப்புடன் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் விளையாடி வந்தார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் 3வது சுற்றில் களமிறங்கிய ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்சை பாபிரினை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பாப்பிரின் 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
ஆனால் ஜோகோவிச் எப்போதும் விட்டுப் பிடிப்பவர் தான். அவரது ஸ்டைலே 2வது செட்டை இழந்த பின் கம்பேக் கொடுப்பது தான் என்பதால், பலரும் ஜோகோவிச் ஆட்டத்தின் பக்கம் கவனத்தை திருப்பினர். ஆனால் கண்மூடி திறப்பதற்குள் மீண்டும் 6-4 என்ற கணக்கில் 2வது செட்டையும் பாப்பிரின் கைப்பற்றினார். இதனால் ஜோகோவிச் மீதான அழுத்தம் எகிறியது.

2வது செட்டில் ஜோகோவிச் 3-2 என்ற முன்னிலையில் இருந்த போதும், பாப்பிரின் ஆக்ரோஷமாக விளையாடி கம்பேக் கொடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் 3வது செட்டில் விழித்து கொண்ட ஜோகோவிச் 6-2 என்ற கணக்கில் மரண மாஸ் கம்பேக்கை கொடுத்தார். தொடர்ந்து 4வது செட் ஆட்டத்தில் இருவரும் 2-2 என்ற நிலையில் இருந்த போது, ஜோகோவிச்சின் சர்வ்களை பாப்பிரின் அசால்ட்டாக எதிர்கொண்டு அசத்தினார்.
இதனால் பாப்பிரின் முன்னிலை பெற்று 6-4 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். இதனால் ஜோகோவிச்சின் யுஎஸ் ஓபன் பயணம் பரிதாமபாக முடிவுக்கு வந்தது. பாப்பிரின் டென்னிஸ் பயணத்தில் முதல்முறையாக டாப் வீரர் ஒருவரை வீழ்த்தி யுஎஸ் ஓபன் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குள் முதல்முறையாக நுழைந்து புதிய வரலாறு படைத்துள்ளார். இதனால் பலரும் பாப்பிரினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதனால் யுஎஸ் ஓபனை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக கிராண்ட்ஸ்லாம் தொடரை வெல்வதற்காக போராடி வரும் மெத்வதேவ், கேஸ்பர் ரூட், ஸ்வெரவ் உள்ளிட்டோர் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏராளமான கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த மெத்வதேவ் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications