Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாதனை படைத்த சின்னர்.. யு.எஸ். ஓபன் அரையிறுதியில் வெற்றி.. இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!

நியூயார்க்: யு.எஸ். ஓபன் 2025 தொடரில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்தார்.

இதன் மூலம், டென்னிஸ் உலகின் தற்போதைய தலைமுறை நட்சத்திரங்களான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜானிக் சின்னர் இடையேயான மற்றொரு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. மற்றொரு அரையிறுதியில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் இறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தார்.

US Open 2025 Jannik Sinner to Face Alcaraz in Men s Singles Final

சாதனைப் படைத்த சின்னர்

இந்த வெற்றியின் மூலம், 1968-ல் தொடங்கிய தொழில்முறை டென்னிஸ் வரலாற்றில், ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்ற நான்காவது வீரர் என்ற மகத்தான சாதனையை சின்னர் படைத்துள்ளார். இதற்கு முன்பு ராட் லேவர், ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிக் ஆகியோர் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

"இது ஒரு அற்புதமான பருவம். கிராண்ட்ஸ்லாம் போட்டிகள்தான் எங்களுக்கான மிக முக்கியமான தொடர்கள். மீண்டும் ஒரு இறுதிப் போட்டிக்கு, அதுவும் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு அற்புதமான ரசிகர்கள் முன்னிலையில் தகுதி பெற்றது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது," என்று போட்டிக்குப் பிறகு சின்னர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

போராடி வென்ற சின்னர்

போட்டியின் முதல் செட்டை சின்னர் எளிதாக 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது செட்டில் சுதாரித்துக்கொண்ட ஆகர்-அலியாசிம், சின்னரின் சர்வீஸை முறியடித்து 6-3 என செட்டைக் கைப்பற்றி ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினார். மூன்றாவது செட்டிலும் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில், சின்னர் மருத்துவ சிகிச்சைக்காக இடைவேளை எடுத்துக்கொண்டார். இருப்பினும், மீண்டு வந்த அவர், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றாவது மற்றும் நான்காவது செட்களைக் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார்.

மீண்டும் ஒரு கிளாசிக் மோதல்

இந்த வெற்றியின் மூலம், மீண்டும் டென்னிஸ் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சின்னர் - அல்கராஸ் இடையேயான இறுதிப் போட்டி அரங்கேறவுள்ளது. இந்த ஆண்டில் இது மூன்றாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் இருவரும் மோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் அல்கராஸ் வென்ற நிலையில், விம்பிள்டன் இறுதிப் போட்டியில் சின்னர் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார்.

இந்த இறுதிப் போட்டி குறித்துப் பேசிய சின்னர், "எங்கள் இருவருக்கும் இடையேயான போட்டி இங்கேதான் தொடங்கியது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இருவரும் இப்போது முற்றிலும் வேறுபட்ட வீரர்கள். தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு நாங்கள் பலமுறை விளையாடியுள்ளோம், அதனால் ஒருவரையொருவர் நன்கு அறிவோம். மீண்டும் ஒருமுறை உங்கள் முன்னிலையில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நியூயார்க் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், ஐந்து செட்கள் வரை நீண்ட ஒரு திரில்லர் ஆட்டத்தில் அல்கராஸ் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, டென்னிஸ் உலகின் முதல் இரு இடங்களில் இருக்கும் இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Saturday, September 6, 2025, 11:08 [IST]
Other articles published on Sep 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+