நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலம் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற இடத்திற்கு தரவரிசையில் அவர் வர இருக்கிறார்.
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. ஜோகோவிச் போட்டியை பார்ப்பதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமா மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் நேரில் வந்திருந்தனர்.

மூன்று முறை சாம்பியன் ஆன ஜோகோவிச் தன்னுடைய முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் முல்லரை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஜோகோவிச் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முல்லரை திணறச் செய்தார். ஜோகோவிச் முதல் செட்டை ஆறுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், இரண்டாவது செட்டையும் 6க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்ற இருந்தார்.
ஆனால் முல்லர் தன்னுடைய முதல் கேமை போராடி வெற்றி பெற அதனை அப்பாடா! ஒரு கேம்மாவது பெற்றுவிட்டேன் என்ற பாணியில் கையை தூக்கி கொண்டாடினார். இதை பார்த்ததும் அங்கிருந்து ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்து முல்லருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனை அடுத்து ஆறுக்கு பூஜ்ஜியம்,ஆறுக்கு இரண்டு, ஆறுக்கு மூன்று, என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் உலகின் முதல் நிலை வீரர் என்ற பெருமையை வரும் செப்டம்பர் 11ஆம் தேதி ஜோகோவிச் பெற இருக்கிறார். இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினால் அது சாதனையாக கருதப்படும். இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீரர் சாப்டாவை ஜோகோவிச் எதிர்கொள்ள உள்ளார். இதனிடையே மற்றொரு ஆடவர் ஒற்றைப் பிரிவு ஆட்டத்தில் கடந்த முறை இறுதிப் போட்டி வரை வந்த நார்வே வீரர் கேஸ்பர் ஏழுக்கு ஆறு, மூன்றுக்கு ஆறு, ஆறுக்கு நான்கு, ஏழுக்கு ஆறு என்ற கணக்கில் அமெரிக்க வீரர் நாவாவை வீழ்த்தினார்.