தெலுங்கானாவுக்கு எனது அமெரிக்க ஓபன் பட்டத்தை சமர்ப்பிக்கிறேன் - சானியா மிர்ஸா
நியூயார்க்: அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றுள்ள சானியா மிர்ஸா, அதை இந்தியாவுக்கும், தான் சார்ந்த தெலுங்கானாவுக்கும் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவின் பிராண்ட் அம்பாசடராக சானியா மிர்ஸா அறிவிக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம். இது சர்ச்சையையும் கிளப்பியது. இதனால் கண்ணீர் விட்டு அழுதபடி எனது தேச பக்திய சந்தேகிப்பதா என்றும் உணர்ச்சிகரமாக கேட்டிருந்தார் சானியா.
ஆனால் அவரது அழுத கண்ணீர் தற்போது ஆனந்தக் கண்ணீராக மாறியுள்ளது. தனது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும், தெலுங்கானாவுக்கும் அர்ப்பணிப்பதாக உணர்ச்சிகரமாக கூறியுள்ளார் சானியா.

சானியா - ப்ரூனோ ஜோடி வெற்றி
கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா - பிரேசலின் ப்ரூனோ சோரஸ் ஜோடி அபார வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்
இது சானியாவுக்கு 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன்பு 2009ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், 2012ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளின் கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் சானியா ஜோடி வென்றுள்ளது.

3 பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை
இந்திய வீராங்கனைகள் யாரும் இதுவரை 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதில்லை. இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் சானியாவின் வெற்றி சாதனையாகும்.

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
தனது வெற்றி குறித்து சானியா கூறுகையில், ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. ப்ரூனோவுடன் முதல் முறையாக இணைந்துள்ளேன். அவருடன் இணைந்து வென்றது மகிழ்ச்சி தருகிறது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் அவருடன் இணைய ஆர்வமாக உள்ளேன். அவரிடமும் கேட்டுள்ளேன்.

இந்தியாவுக்கு, தெலுங்கானாவுக்கு சமர்ப்பனம்
எனது இந்த வெற்றியை, இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்கு, தெலுங்கானா மாநிலத்துக்கு, தெலுங்கானா மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
சர்ச்சை மனதில் வரவில்லைநான் எப்போதுமே சர்ச்சைகளை மனதில் ஏற்றிக் கொள்வதில்லை. எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கி விடுவேன். இந்தப் போட்டித் தொடரின்போதும் கூட நான் மனதில் எதையும் வைத்துக் கொள்ளவில்லை. வெற்றியை மட்டுமே மனதில் வைத்திருந்தேன் என்றார் சானியா.

3வது இந்தியர்
இதற்கு முன்பு இந்தியா சார்பில் அதிக அளவிலான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமையை லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர்தான் வைத்திருந்தனர். தற்போது அவர்களுடன் சானியாவும் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications