லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்தார். இதன் மூலம் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
லண்டனில் நடைபெற்ற ஆடவர் ஒற்றைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான சின்னர், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்ரிக் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கிய அல்காரசும் பலப்பரிட்சை நடத்தினர். இருவரும் கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டியில் மோதினர்.

இதில் அல்காரஸ் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி சின்னருக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் மீண்டும் இருவரும் பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மோதியதால், யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் முதல் செட்டை அல்காரஸ் ஆறுக்கு நான்கு என்ற கணக்கில் வென்று வெற்றி பெற்றார்.
இதன் மூலம் அல்காரஸ் மீண்டும் வெற்றியைப் பெறப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனினும் சின்னர் கடந்த பிரஞ்சு ஒபபனில் செய்த தவறை இம்முறை செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஒவ்வொரு ஆட்டத்தையும் நேர்த்தியாக விளையாடிய அவர் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் அடுத்த மூன்று செட்டுகளையும் ஆறுக்கு நான்கு, ஆறுக்கு நான்கு ஆறுக்கு நான்கு என்ற கணக்கில் வென்று விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றார்.
இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் நான்கு நிமிடம் நீடித்தது. இதனை அடுத்து சின்னர் வெற்றி பெற்றதும் தனது பயிற்சியாளர் குழு உறவினர்களுடன் வெற்றியை கொண்டாடினார். சாம்பியன் பட்டம் பெற்ற சின்னருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 34 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. ரன்னர் அப் பட்டத்தை வென்ற அல்காரசுக்கு 17 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்தது. சின்னர் ஏற்கனவே இரண்டு முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும்,அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்ற நிலையில் தற்போது விம்பிள்டன் பட்டத்தை வென்று நான்காவது கிராஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த வெற்றியை தமது பயிற்சியாளர் குழுவுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்த அவர் இந்த வெற்றியை தான் பெற அல்காரஸ் தம்மை கடுமையாக போராட வைத்ததாக பாராட்டினார். விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம் தமது கனவு நினைவாகி இருப்பதாக சின்னர் கூறியுள்ளார். இதைப் போன்று விம்பிள்டன் தொடரில் பணியாற்றிய பால் பாய்ஸ்கலுக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜானிக் சின்னர் கூறியுள்ளார்.