விம்பிள்டன் டென்னிஸ் 2026: முதல் நாளிலே களமிறங்கும் சின்னர்.. எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்?
லண்டன்: லண்டனில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது 2026-ஆம் ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர். முதல் நாளிலேயே உலகின் நம்பர் 1 வீரர்களான ஜானிக் சின்னர் களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்திய ரசிகர்கள் இந்த ஆட்டங்களை எப்போது, எங்கே பார்க்கலாம்? முழு விவரங்கள் இதோ.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு வெளி மைதானங்களில் (Outer courts) போட்டிகள் தொடங்குகின்றன. மிகவும் எதிர்பார்க்கப்படும் பாராம்பரியமிக்க சென்டர் கோர்ட் (Centre Court) ஆட்டங்கள் மாலை 6:00 மணிக்கு ஆரம்பமாகும். அதேபோல், கோர்ட் எண் 1-இல் மாலை 5:30 மணி முதல் போட்டிகள் நடைபெறும். இதனால் இன்று இரவு முழுவதும் இந்திய டென்னிஸ் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது.

விம்பிள்டன் முதல் நாள்: இந்திய நேரப்படி முக்கியப் போட்டிகளின் அட்டவணை
முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் புகழ்பெற்ற சென்டர் கோர்ட்டில் தனது ஆட்டத்தைத் தொடங்குகிறார். அதேபோல், மகளிர் பிரிவில் இகா ஸ்வியாடெக் வெற்றியுடன் தொடரைத் தொடங்கத் தயாராக உள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானங்களில் இன்று பல விறுவிறுப்பான மோதல்கள் நடக்கவுள்ளன. எந்தெந்த மைதானங்களில் யார் விளையாடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், உங்களுக்குப் பிடித்த வீரர்களின் ஆட்டத்தைத் தவறவிடாமல் பார்க்கலாம். பொதுவாக, விம்பிள்டன் தொடரின் முதல் நாள் ஆட்டங்களில் பல அதிரடித் திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம்.
இந்தியாவில் விம்பிள்டன் போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி?
இந்தியாவில் உள்ள ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் (Star Sports Select) சேனல்களில் போட்டிகளை நேரலையில் காணலாம். மொபைலில் பார்க்க விரும்புவோர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) செயலியைப் பயன்படுத்தலாம். இதில் அனைத்து மைதானங்களின் ஆட்டங்களையும் உயர்தர ஸ்ட்ரீமிங்கில் பார்க்க முடியும். அதோடு, உடனுக்குடன் ஸ்கோர் விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
லண்டனில் வானிலை சீராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழை பெய்தாலும், மைதானத்தின் மேற்கூரைகள் தயார் நிலையில் உள்ளன. இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த கடினமான கிராண்ட் ஸ்லாம் தொடரில், முதல் வெற்றி என்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும். செரீனா வில்லியம்ஸ் பல ஆண்டுகளுக்கு பிறகு விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கு திரும்பி இருப்பது இந்த தொடரின் மீதான எதிர்பார்க்கை அதிகரித்துள்ளது.
இதே போன்று உலகின் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ், காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. தனது 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை துரத்தும் ஜோகோவிச்சுக்கு விம்பிள்டன் கடும் சவால்களை தரும். புற்தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட் ஸ்லாம் தொடர் விம்பிள்டன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை 8 முறை ரோஜர் பெடரர் வென்றதே இன்றளவிலும் சாதனையாக உள்ளது.


Click it and Unblock the Notifications

